சென்னை:''நீங்கள் எங்களுக்கு உதவி செய்யுங்கள்; நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம்,'' என, பா.ஜ., - வானதி சீனிவாசன் பேசினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:பா.ஜ., - வானதி: கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம், கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, தற்போதைய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டாண்டு காலத்திற்குள், இப்பணிகளை துவங்க வேண்டும். இது தொடர்பாக, மத்திய அமைச்சர் ஹர்த்திப் சிங் புரியை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன்.அமைச்சர் தங்கம் தென்னரசு: உங்களது மெட்ரோ ரயில் ஆர்வத்தை பாராட்டுகிறேன். இதில், 50 சதவீத நிதி பங்களிப்பு மத்திய அரசு உடையது. கோவைக்கு அருகில் உள்ள கொச்சி மெட்ரோவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை, கோவை திட்டங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இந்த திட்டத்திற்கான பங்களிப்பையும் மத்திய அரசு வழங்கவில்லை. இதற்கு, 69,000 கோடி ரூபாயை, மாநில அரசு, சொந்த நிதியை பயன்படுத்தி பணிகளை செய்கிறது. இந்த திட்டத்திற்கு அனுமதி மட்டுமின்றி, பங்களிப்பு நிதியையும் பெற்று தர வேண்டும்.வானதி: சென்னை, கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான தகவல்களை கொடுத்தால், உதவி செய்வதற்கு நாங்கள்தயாராக இருக்கிறோம். உங்களுடன் இணைந்து பணியாற்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவுவதுதான் எங்களுடைய பணி என்பதை நாங்கள் முழுமையாக உணர்ந்து இருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு உதவி செய்யுங்கள்;நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம்.தங்கம் தென்னரசு: எங்களை அழைப்பது போல, உங்களது முன்னாள் நண்பர்களையும் சேர்த்து அழைக்க தயாரா; அவர்கள் அதற்கு தயாராக இருக்கின்றனரா?சபாநாயகர் அப்பாவு: தங்கமணியும், வானதி யும் ஒன்றரை மணி நேரம் பேசியதாக செய்தி கேட்டேன்.வானதி: ஒரு சில பத்திரிகைகளில், 15 நிமிடம் என செய்தி வந்தது. நீங்கள் ஒன்றரை மணி நேரம் என மாற்றி விட்டீர்கள். தமிழகத்தின் வளர்ச்சி, மேம்பாடு, முன்னேற்றத்திற்கு, எந்த அரசியலையும் பார்க்காமல் பாடுபட வேண்டும் என்பதுபிரமதரின் லட்சியம். அதை குறிக்கோளாக கொண்டு நாங்கள்இயங்குகிறோம்.இவ்வாறு விவாதம் நடந்தது.