நாட்டு துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொலை; கல்வராயன்மலையில் பரபரப்பு
கச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் முன்விரோத தகராறில் வாலிபரை நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்வராயன்மலையில் உள்ள கொட்டபுத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் பிச்சன், 50; இவரது மகன்கள் விஜய், 28; பிரகாஷ், 26; விவசாயம் நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கும் பக்கத்து விவசாய வயலில் வசிக்கும் நடுமத்துார் கிராமத்தை சேர்ந்த ஆண்டி மகன் தங்கராஜ் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக கடந்த 5 ஆண்டுகளாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, பிரகாஷ் தனது நிலத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, பிரகாஷ் பின் தலையில் துப்பாக்கியால் சுட்டதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார். அங்கிருந்தவர்கள் பிரகாஷை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம னைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து பிரகாஷ் தந்தை பிச்சன் அளித்த புகாரின் பேரில், கரியாலுார் போலீ சார் ஆண்டி மகன்கள் தங்கராஜ், செல்வம், அண்ணாமலை, இளையராஜா ஆகிய 4 பேர் மீது கொலை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டுகொள்ளாத போலீசார்
கல்வராயன்மலை கள்ளச்சாராயத்திற்கு மட்டும் புகழ்பெற்றது கிடையாது. அங்கு, பெரும்பலா னோர் வீடுகளில் விலங்குகளை வேட்டையாடுவதிற்காக நாட்டு துப்பாக்கிகளும் புழக்கத்தில் உள்ளது. இது போலீசாருக்கும் நன்கு தெரியும். ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாக போலீசார் இதனை கண்டுகொள்வது கிடையாது. அதன் விளைவாக நாட்டு துப்பாக்கியால் வாலிபர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.