சிட்னி: ஆஸ்திரேலியாவில் ரீசஸ் நோயினால் பாதிப்பிற்கு உள்ளான 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளை, தனது ரத்த தானம் வாயிலாக காப்பற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் 88 வயதில் உடலநல்குறைவால் காலமானார்.ஆஸ்திரேலியாவின் தெற்கு நியூ சவுத்வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹாரிசன் 88 இவருக்கு 14 வயதில், நடத்தப்பட்ட ஆபரேஷனின்போது, அவருக்கு ஒரு நுரையீரல் அகற்றப்பட்டிருந்தது. இந்த ஆபரேஷனுக்காக, ஹாரிசனின் உடலில், முகம் தெரியாத பலர் அளித்த 13 யூனிட்கள் ரத்த தானம் மூலம் உயிர் பிழைத்தார். தான் உயிர் பிழைத்ததற்கு நன்றி கடனாக அப்போதே, ரத்த தானம் செய்வதில் விருப்பம் கொண்டிருந்தார்.இந்நிலையில் ஆஸ்திரேலியாவில், ரீசஸ் நோயினால் பச்சிளம் குழந்தைகள் அதிகம் மரணமடைந்து வந்தனர். இந்த நோய்க்கு தீர்வுஏற்பட ஆன்டி-டி ஆன்டிபாடி அவசியமானதாகிறது. இதனிடையே, ஹாரிசனின் ரத்த பிளாஸ்மாவில், இந்த ஆன்டி - டி ஆன்டிபாடி இருப்பது கண்டறியப்பட்டது. தனது 18 வயதிலிருந்து ரத்த தானம் செய்ய துவங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயிரம் தடவைக்கு மேல் ரத்த தானம் செய்து ஜேம்ஸ் ஹாரிசன் சாதனை படைத்துள்ளார், இவரது இந்த செயற்கரிய செயலின் மூலம், 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பயனடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக ரத்த தானம் அளிப்பதை நிறுத்தினார். உடல் நலக்குறைவால் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் கடந்த பிப் 17-ம் தேதியன்று இறந்ததாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.ரீசஸ் நோய் என்றால் என்ன?:
பெண்ணின் பிரசவ காலத்தில், இந்நோய் இருக்கும் பட்சத்தில், பெண்ணின் ரத்தத்தில் ரீசஸ் நெகட்டிவ் (RhD negative) இருக்கும். கருவில் உள்ள குழந்தையின் ரத்தத்தில் ரீசஸ் பாசிட்டிவ் (RhD positive) ஆக இருக்கும். இவ்வாறு இருக்கும்பட்சத்தில், பெண்ணின் ரத்தம், குழந்தையின் ரத்த செல்களை அழித்து மரணத்திற்கு வழிவகுத்துவிடும்.