உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லண்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது...தாக்குதல் முயற்சி!  கார் மீது பாய்ந்த காலிஸ்தான் ஆதரவாளர்

லண்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது...தாக்குதல் முயற்சி!  கார் மீது பாய்ந்த காலிஸ்தான் ஆதரவாளர்

புதுடில்லி பிரிட்டனின் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திரும்பியபோது, அங்கு கூடியிருந்த காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் ஒருவர், அமைச்சரின் காரை நோக்கி பாய்ந்து அவரை தாக்க முயன்றார். மேலும், நம் தேசியக் கொடியை கிழித்து அவமதித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டன் மற்றும் வட அமெரிக்க நாடான கனடாவில் இருந்து காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய துாதரகம், ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவதுடன், இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசியக்கொடி

இந்நிலையில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிரிட்டன் மற்றும் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்; இரு நாடுகளிலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸ் என்ற சர்வதேச விவகாரங்களுக்கான சிந்தனையாளர் அமைப்பின் கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்றார்.கூட்டம் நடந்த கட்டடத்துக்கு வெளியே, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர், அதன் கொடியை ஏந்தி கோஷமிட்டனர். போலீசார் தடுப்புகளை அமைத்து அவர்களை கட்டுப்படுத்தினர். கூட்டத்துக்குப் பின், அமைச்சர் ஜெய்சங்கர் தன் காரை நோக்கி சென்றார். அப்போது அவர்கள் கடுமையாக கோஷமிட்டனர். இந்நிலையில், காலிஸ்தான் ஆதரவாளர்களில் ஒருவர், அமைச்சர் காரை நோக்கி பாய்ந்தார். அமைச்சரை தாக்க முயன்ற நபரை, போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.அப்போது தன் கையில் வைத்திருந்த இந்திய தேசியக்கொடியை அவர் கிழித்தெறிந்தார். அவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஆனால், கைது செய்யப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.இந்த சம்பவத்துக்கு, நம் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:வெளியுறவு அமைச்சரின் பாதுகாப்பு மீறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் துாதரக பொறுப்புகளை பிரிட்டன் அரசு முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோக்களில் இருந்து, ஒரு சிறிய பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத கும்பல், வன்முறையை துாண்டும் வகையிலான செயல்களில் ஈடுபட்டுள்ளது உறுதியாகிறது.

நடவடிக்கை

ஜனநாயக சுதந்திரத்தை இதுபோன்று துஷ்பிரயோகம் செய்வதை ஏற்க முடியாது. இந்த விஷயத்தில், பிரிட்டன் அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பிரிட்டனில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்ததை கண்டித்து நடந்த போராட்டத்தை, போலீசார் துரிதமாக கலைத்தனர். அதுபோல், காலிஸ்தான் ஆதரவாளர்களை அப்புறப்படுத்தாமல் பாரபட்ச நடவடிக்கை மேற்கொண்டதாக நம் வெளியுறவுத்துறை வன்மையாக கண்டித்துள்ளது.

பிரிட்டன் அரசு விளக்கம்!

தாக்குதல் முயற்சி குறித்து பிரிட்டன் அரசு கூறியுள்ளதாவது:பொது நிகழ்ச்சிகளுக்கு இடையூறான, வன்முறையை துாண்டும் அல்லது மிரட்டும் வகையிலான எந்த நடவடிக்கையையும் ஏற்க முடியாது. நடந்த சம்பவத்துக்கு அரசு தீவிரமாக எதிர்ப்பு தெரிவிக்கிறது.தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான வழியில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதி உள்ளது. அதே நேரத்தில் பொது அமைதியை குலைக்கும் வகையில், இதுபோன்று நடந்து கொண்டது கண்டனத்துக்கு உரியது. சர்வதேச பொறுப்புகளை மதித்து, வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை பிரிட்டன் அரசு உறுதி செய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரம் முடிந்து விட்டது!

சாத்தம் ஹவுஸ் நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீர் விவகாரம் என்பது ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்டது. அங்கு மத்திய அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, அதில் முதல் சிறப்பு நடவடிக்கை. தற்போது அங்கு வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது. அங்கு சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தப்பட்டது மிகப்பெரும் நடவடிக்கையாகும்.ஒன்றே ஒன்று தான் பாக்கி; அது, திருடப்பட்ட ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான். அது செய்யப்பட்டால், பிரச்னை முழுமையாக தீர்க்கப்பட்டு விடும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சப்காத் அலி கான் கூறியுள்ளதாவது:அமைச்சர் ஜெய்சங்கர் தவறான, ஆதாரமில்லாத தகவல்களை கூறியுள்ளார். சட்டவிரோதமாக, 77 ஆண்டுகளாக தன் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு - காஷ்மீரில் இருந்து இந்தியா விலகினால் தான், பிரச்னைக்கு முழுமையாக தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை