உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் ஹோட்டல் முன் வெடித்து சிதறிய சைபர் டிரக்: ஒருவர் பலி

டிரம்ப் ஹோட்டல் முன் வெடித்து சிதறிய சைபர் டிரக்: ஒருவர் பலி

லாஸ்வேகாஸ்: அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்ப்புக்கு சொந்தமான ஹோட்டல் முன், 'சைபர் டிரக்' வாகனம் வெடித்ததில், ஒருவர் பலியானார்; ஏழு பேர் காயம் அடைந்தனர்.அமெரிக்காவின் நெவோடா மாகாணத்தில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில், அமெரிக்க புதிய அதிபராக விரைவில் பதவியேற்க உள்ள டிரம்ப்புக்கு சொந்தமான ஹோட்டல் உள்ளது.புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் அந்த ஹோட்டல் முன் நிறுத்தப்பட்டிருந்த சைபர் டிரக் எனப்படும் மின்சார கார் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் கார் டிரைவர் பலியானார்; அருகே நின்றிருந்த ஏழு பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். வெடித்துச் சிதறிய சைபர் டிரக், தொழிலதிபர் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்துக்குச் சொந்தமான கார். விபத்து குறித்து எலான் மஸ்க் கூறுகையில், ''முன் எப்போதும் இதுபோன்ற விபத்தை பார்த்ததில்லை. சைபர் டிரக்கின் இருக்கையில் எடுத்துச் செல்லப்பட்ட வெடிகுண்டு அல்லது பட்டாசுகள் தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம்,'' என்றார்.விபத்து குறித்து லாஸ்வேகாஸ் நகர ஷெரிப் கெவின் மஹில் கூறுகையில், ''இந்த விபத்துக்கும் ஐ.எஸ்.,எனப்படும் இஸ்லாமிய அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை,'' என்றார். இதற்கிடையே, நியூ ஓர்லென்சில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும், இந்த விபத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.சைபர் டிரக் என்பது, சரக்குகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் மின்சார வாகனம். இந்த வாகனத்தின் வெளிப்புறம், மிகவும் உறுதியான, 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால்' வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த வாகனம், 5,000 கிலோ எடையுள்ள பொருட்களை இழுத்துச் செல்லும் திறன் உடையது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை