| ADDED : ஜூலை 26, 2024 12:21 AM
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.இலங்கையில் கடந்த 2022ல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், அந்நாட்டில் மக்கள் புரட்சி வெடித்தது. இதை எதிர்கொள்ள முடியாமல், அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு தப்பிச் சென்று சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்தார். அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்ததை அடுத்து, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.அனைத்து கட்சி ஆதரவுடன் அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே பதவிக்காலம் வரும் நவம்பருடன் முடிவுக்கு வருகிறது.இதையடுத்து, வரும் செப்., 17ல் இருந்து அக்., 16க்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என, அந்நாட்டு தேர்தல் கமிஷன் தெரிவித்தது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். நீதித்துறை அமைச்சராக உள்ள விஜயதாச ராஜபக்சே, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜே.வி.பி., தலைவர் அனுரா குமரா திசநாயகே உள்ளிட்டோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.இந்நிலையில், முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, 73, அதிபர் தேர்தலில் களம் காணப்போவதாக நேற்று அறிவித்துள்ளார்.இது குறித்து, தன் சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவு:கடந்த 76 ஆண்டுகளாக நம் நாட்டை திவாலாக்கும் நிலைக்கு தள்ளிய திறமையற்ற கட்சிகளால் நாம் வழிநடத்தப்பட்டு வருகிறோம். இலங்கை வளர்ச்சியடைய வேண்டுமானால் ஊழலை நசுக்க வேண்டும்.வருமானத்தை அதிகரிக்க நம் இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும். எனவே, 2024 அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் தனி நாடு கேட்டு ஆயுதப் போரில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை முற்றிலுமாக ஒழித்த போரில், சரத் பொன்சேகாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. போர் முடிவுக்கு வந்த பின், 2010ல் நடந்த அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகா படுதோல்வி அடைந்தார்.