டாக்கா : வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தின் போது நடந்த படுகொலை தொடர்பாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 10 பேர் மீதான விசாரணை, அந்நாட்டு நீதிமன்றத்தில் நேற்று துவங்கியது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், 560 பேர் உயிரிழந்தனர். வழக்கு
இதன் எதிரொலியாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறினார். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அங்கு அமைந்தது. ஜூலை 1ம் தேதி முதல் ஆக., 5 வரையிலான காலத்தில் நடத்தப்பட்ட கொலைகள் குறித்து, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்படும் என இடைக்கால அரசு அறிவித்திருந்தது. போராட்டத்தின் போது, முகமதுபூர் பகுதியில் போலீசார் துப்பாக்கிச் சூட்டில், மளிகை கடை உரிமையாளர் அபு சயீத் கொல்லப்பட்டது தொடர்பாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. அதேபோல், மாணவர்களின் போராட்டத்தின் போது ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஆரிப் முகமது ஷயாம் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது தந்தை புகார் அளித்தார். அதில், மாணவர்கள் மீது அப்போதைய அரசு வன்முறை அடக்குமுறையை ஏவி விட்டதால், தன் மகன் இறந்ததாக அவர் குற்றஞ்சாட்டினார். இதன் விளைவாகவே பரவலான உயிரிழப்புகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் அமைச்சர்கள் என, 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை, டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் நேற்று துவங்கியது. இதற்கிடையே, துப்பாக்கிச் சூட்டில் மளிகை கடைக்காரர் கொல்லப்பட்ட வழக்கில், அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் உரிய அறிக்கை தாக்கல் செய்ய வங்கதேச போலீசாருக்கு, டாக்கா பெருநகர மாஜிஸ்திரேட் முஹமது ஜகி அல் பராபி உத்தரவிட்டுள்ளார். கைது செய்ய வலியுறுத்தல்
ஷேக் ஹசீனா மற்றும் அவரது அமைச்சரவையில் இருந்த முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய வலியுறுத்தி, வங்கதேச தேசியவாத கட்சியினர் நேற்று நாடு முழுதும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய ஷாஹித் மினார், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.