உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம்; இளையராஜாவின் கனவு நிறைவேறியது

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம்; இளையராஜாவின் கனவு நிறைவேறியது

லண்டன் : இசையமைப்பாளர் இளையராஜா, 81, இயற்றிய மேற்கத்திய கிளாசிக்கல் இசை தொகுப்பான, 'வேலியன்ட்' சிம்பொனியை, லண்டனில் நேற்று அரங்கேற்றினார்.தமிழகத்தின் தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்த இசைஅமைப்பாளர் இளைய ராஜா, 1,000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 15,000க்கும் அதிகமான பாடல்களுக்கு இசைஅமைத்துள்ளார்.மேற்கத்திய இசைக்கலைஞர்கள் மொசாட், பீத்தோவன் உள்ளிட்டோரால் கவரப்பட்டு, அவர்களை போலவே சிம்பொனி இசைக்குறிப்பை சொந்தமாக எழுதி, அதை அரங்கேற்ற வேண்டும் என்பது ராஜாவின் பல ஆண்டு கனவு.இதற்காக நீண்ட காலமாக சிம்பொனி இசை தொகுப்பை அவர் எழுதி வந்தார். சமீபத்தில் அதை நிறைவு செய்த அவர், லண்டனில் அதை அரங்கேற்ற திட்டமிட்டார்.இளையராஜா எழுதியுள்ள சிம்பொனிக்கு, 'வேலியன்ட்' என பெயரிடப்பட்டது. இது, லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை, 12:30 மணிக்கு அரங்கேற்றப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க சிம்பொனி இசை கோர்வையை லண்டனின் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவினர் இசைத்தனர். இந்த அரங்கேற்றத்தை பார்த்து ரசிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் அரங்கத்தில் குவிந்தனர். மொத்தம், 3,665 இருக்கைகள் உடைய அரங்கத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன. சிம்பொனியை இசைத்து முடித்தவுடன் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். நிகழ்ச்சியின் போது, தான் இசையமைத்த சில திரைப்படப் பாடல்களையும் இளையராஜா பாடி இசைத்தார்.அவரது இசை வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. இதன் வாயிலாக, ஆசியாவிலேயே சினிமா துறையில் இருந்து லண்டனில் இந்த சாதனையைப் படைத்த முதல் இசைக்கலைஞர் என்ற பெருமையை இளையராஜா பெற்றுள்ளார்.மேலும், தெற்காசியாவில் இருந்து முழு சிம்பொனி தொகுப்பை எழுதி இசையமைத்த முதல் இசைக்கலைஞர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.இந்த சாதனையின் வாயிலாக, உலகப் புகழ் பெற்ற மேற்கத்திய இசைக்கலைஞர்களான மொசாட், பீத்தோவன் வரிசையில் இளையராஜாவும் இணைந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி