| ADDED : மார் 06, 2025 07:23 AM
ஹைதராபாத்: அமெரிக்காவில் தெலுங்கானாவைச் சேர்ந்த 26 வயது மாணவன் குண்டு காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் உள்ள பல்கலையில், தெலுங்கானாவைச் சேர்ந்த பிரவீன் என்ற மாணவன் உயர்படிப்பு படித்து வந்தார். ஹைதராபாத்தில் பி டெக் படித்து வந்த பிரவீன், கடந்த 2023ம் ஆண்டு, மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். இவர் கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வந்து விட்டு, இந்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் அமெரிக்கா சென்றார். இந்த நிலையில், பிரவீன் அங்குள்ள ஸ்டோரில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள், தெலுங்கானாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை என்றும், பிரதே பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகே உண்மை தெரிய வரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், பதறிப்போன பிரவீன் குடும்பத்தினர், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்காக, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 4 மாதங்களில் தெலுங்கானாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது நிகழ்ந்துள்ள மற்றொரு சம்பவம் இந்தியர்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.