சுவிட்சர்லாந்துடன் வர்த்தக ஒப்பந்தம் அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை
ஜெனீவா:நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்துக்கு இரண்டு நாள் பயணமாக சென்றார். நேற்று முன்தினம் முடிந்த இந்தப் பயணத்தின்போது, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் இக்னாஜியோ டேனியேல் கியோவான்னி காசிசை சந்தித்து பேசினார்.சுவிட்சர்லாந்து, நார்வே உள்ளிட்ட நான்கு நாடுகள் அடங்கிய ஐரோப்பிய தாராள வர்த்தக சங்கத்துடன் இந்தியா கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தது. இதன்படி, இந்த நாடுகள் இந்தியா வில் முதலீடு செய்ய முன் வந்துள்ளன.இந்த ஒப்பந்தத்தின் முன்னேற்றம் குறித்தும், சுவிட்சர்லாந்துடனான தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகவும், இரு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர். தொழில், வர்த்தகம், முதலீடுகள் தொடர்பாகவும், பல சர்வதேச பிரச்னைகள் தொடர்பாகவும் அவர்கள் பேசினர்.இதைத் தவிர, உலக சுகாதார அமைப்புக்குச் சென்ற அவர், அதன் தலைவர் டெட்ரஸ் அதனோம் கெப்ரியாசியை சந்தித்தார்.இந்த சந்திப்பி ன்போது, சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டிய இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அவர் விளக்கினார்.இதைத் தவிர, ஜெனீவாவில், இந்தியாவின் புதிய துாதரக வளாகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
ராகுலை கிண்டல் செய்தார்!
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரசின் ராகுல், ஏழை குடும்ப பெண்கள் வங்கிக் கணக்கில், ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்றார். இது, 'கடா கட்' எனப்படும் மிகவும் வேகமாக செய்யப்படும் என்றார்.ஜெனீவாவில், இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பின்போது, இதைக் கிண்டல் செய்யும் வகையில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:கடந்த, 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள்கட்டமைப்பு திட்டங்கள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எவ்வளவு மனித சக்தி தேவைப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இதற்கான மனித வளத்தை உருவாக்குவதற்கு, சிறந்த கொள்கைகள் தேவை.வாழ்க்கை என்பது, 'கடா கட்' அல்ல. வாழ்க்கையில் வெற்றி பெற கடினமான உழைப்பு, சிறந்த திட்டமிடல் தேவை. எந்த ஒரு வேலையிலும், கடின உழைப்பு இருந்தால்தான், பலனைப் பெற முடியும். கடா கட் முறையில் வெற்றியை எட்ட முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.