சுனிதா வில்லியம்ஸ் இன்றி தனியாக பூமிக்கு திரும்பியது ஸ்டார்லைனர்
நியூ மெக்சிகோ, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இல்லாமல், அவர்கள் சென்ற, 'போயிங் ஸ்டார்லைனர்' விண்கலன் மட்டும் பூமிக்கு நேற்று திரும்பியது.விண்வெளிக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும், 'ஸ்டார்லைனர்' என்ற விண்கலத்தை, 'போயிங்' நிறுவனம் உருவாக்கியது. இதற்கு பின்னால், 10 ஆண்டுகள் கடும் உழைப்பு உள்ளது. தொழில்நுட்ப கோளாறு
இந்த விண்கலத்தில் வீரர்களை விண்ணுக்கு அனுப்ப, பல ஆண்டுகளுக்கு முன்னரே நாசா திட்டமிட்டது. ஆனால், பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி, ஸ்டார்லைனர் தன் முதல் பயணத்தை ஜூன் 5ல் துவங்கியது.விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் அதில் பயணித்தனர். ஜூன் 6-ல் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். ஒரு வாரத்தில் அவர்கள் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டது. ஆனால், அவர்கள் பயணித்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதை சரி செய்யும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.கடந்த 90 நாட்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அவர்களை, பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அவர்களை பூமிக்கு பத்திரமாக அழைத்து வந்துவிடலாம் என, போயிங் நிறுவனம் பச்சைக்கொடி காட்டியது.ஆனால், அதில் ஆபத்து இருப்பதாக கூறி நாசா மறுத்துவிட்டது. இதை தொடர்ந்து, ஸ்டார்லைனர் விண்கலத்தை மட்டும் ஆளின்றி தனியாக பூமிக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது.இதை தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து தானியங்கி முறையில், 'அன் - டாக்' செய்து கொண்டு ஸ்டார்லைனர் விண்கலம் தனியாக புறப்பட்டது. விண்கல சோதனை
அமெரிக்காவின், நியூ மெக்சிக்கோவில் உள்ள ஒயிட் சேன்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பரில் நேற்று காலை தரையிறங்கியது. இது, ஸ்டார்லைனர் விண்கல சோதனையின் இறுதிக்கட்டமாக அமைந்தது.சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் விண்கலனை அனுப்பி அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா ஏற்பாடு செய்துள்ளது.