உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தான் கலவரத்தில் 11 பேர் சுட்டுக்கொலை?

பாகிஸ்தான் கலவரத்தில் 11 பேர் சுட்டுக்கொலை?

இஸ்லாமாபாத்:காசா மக்களுக்கு ஆதரவாக, பாகிஸ்தானில் தெஹ்ரிக் - இ - லப்பை என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தி வரும் போராட்டங்களால் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் பதற்றம் தொற்றியுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. அங்கு, ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழித்து ஒரு இடைக்கால அரசை நிறுவ வேண்டும் என்பது, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எண்ணம். அமெரிக்காவின் தலைமையில் காசாவை வழிநடத்த பல்வேறு நாடுகள் பேச்சு நடத்தி வருகின்றன. இ து, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான மேற்கத்திய ஆதரவு கொள்கைகளை திணிக்கும் முயற்சி என பாகிஸ்தானில் உள்ள டி.எல்.பி., எனும் தெஹ்ரிக் - இ - லப்பை கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு, பாகிஸ்தானும் ஆதரவாக இருப்பதாகக் கூறி கடந்த 10ம் தேதி அவர்கள் போராட்டத்தை தொடங்கினர். லாகூரில் இருந்து இஸ்லாமாபாதில் உள்ள அமெரிக்க துாதரகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கானோர் பேரணியாக செல்ல முயன்றனர். அதை தடுக்க முயன்ற போலீசார் வாகனங்களை பறித்து, கற்கள் மற்றும் கம்புகளால் தாக்கினர். பதிலுக்கு போலீசார், கண்ணீர் புகை மற்றும் ரப்பர் குண்டுகள் பயன்படுத்தி, அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இந்த போராட்டம் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் பரவியது. இதனால், லாகூர் -- இஸ்லாமாபாத் -- பெஷாவர் நெடுஞ்சாலை மூடப்பட்டது. மேலும் பஞ்சாப் மாகாணத்தின் பல முக்கிய நகரங்களில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தடை உத்தரவு போடப்பட்டதால் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தெஹ்ரீக் - இ - -லப்பை கட்சியைச் சேர்ந்த 11 பேரை பஞ்சாப் போலீஸ் சுட்டுக் கொன்றதாக அக்கட்சி தலைவர் சாத் ரிச்வி குற்றம் சாட்டியுள்ளார். தாக்குதலில், 24க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அவர்களுக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். டி.எல்.பி.,யின் மூத்த தலைவர்களும், பல உள்ளூர் பிரமுகர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால், பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ராணுவத்தின் பினாமி!

தெஹ்ரிக் - இ - லப்பை என்பது பாகிஸ்தானில் உள்ள ஒரு தீவிர முஸ்லிம் அரசியல் கட்சியாகும். இருப்பினும் இந்த அமைப்பு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இக்கட்சியின் சித்தாந்தம் தீவிர இஸ்லாமியவாதம், மத பழமைவாதம் ஆகும். இவர்களது முக்கிய குறிக்கோள், பாகிஸ்தானில் ஷரி யத் சட்டத்தின் கடுமையான விளக்கத்தின் அடிப்படையில் ஒரு முஸ்லிம் ஆட்சியை கொண்டு வருவதாகும். இந்த அமைப்பு, பாகிஸ்தான் ராணுவத்தின் பினாமி என்று கூறப்படுகிறது. அரசியல் ரீதியாக சந்திக்க வேண்டிய பிரச்னைகளில், இந்த அமைப்பை, பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ