பாகிஸ்தானின் பஞ்சாபில் 18 பயங்கரவாதிகள் கைது
லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தெஹ்ரிக் - -இ - -தலிபானை சேர்ந்தவர்கள் உட்பட, 18 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் தங்கள் நாட்டில் சதி செயல்களில் ஈடுபடுவதாக, நம் அண்டை நாடான பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை என்று கூறி, ஆப்கன் மீது வான்வழி தாக்குதலும் நடத்தியது. இதை மறுத்து ஆப்கானிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் இருநாடுகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தநிலையில் பஞ்சாப் மாகாணத்தில், பல்வேறு மாவட்டங்களில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்தது. அதன்பேரில், பஞ்சாப் போலீசின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. அதில், 18 பயங்கரவாதிகள் சிக்கினர். அதில் பெரும்பாலானோர்,தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தெஹ்ரிக்- - இ- - தலிபான் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பஞ்சாபில் முக்கிய கட்டடங்கள் மற்றும் நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 3 கிலோ வெடி பொருள், 'டெட்டனேட்டர்'கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பிரசுரங்களும், 'மொபைல் போன்'கள், பணம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.