உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹமாஸ் பிடியில் 738 நாட்கள் இருந்த 20 பிணை கைதிகள் விடுவிப்பு

ஹமாஸ் பிடியில் 738 நாட்கள் இருந்த 20 பிணை கைதிகள் விடுவிப்பு

ஜெருசலேம்; காசாவில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் பிடியில், 738 நாட்களாக இருந்த 20 பிணைக் கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆனந்த கண்ணீருடனும், கூச்சலுடனும் இஸ்ரேல் மக்கள் வரவேற்பு அளித்தனர். மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. உலக நாடுகளின் அழுத்தத்தையடுத்தும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் 20 அம்ச அமைதி திட்ட முன்மொழிவையடுத்தும், இருதரப்பும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. அமைதி திட்டத்தில் உள்ள சில முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என, ஹமாஸ் தெரிவித்திருந்தது. இருப்பினும், பிணைக் கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில அம்சங்களை இரு தரப்பும் ஏற்றன. இதன்படி போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பும் முன் வந்தன. அமைதி திட்டத்தின் முதல்கட்டத்தின் அடிப்படையில், 192 கைதிகளை நேற்று முன்தினம் இஸ்ரேல் விடுவித்தது. இதைத்தொடர்ந்து, ஹமாஸ் தன்னிடம் உயிருடன் இருந்த 20 பிணைக் கைதிகளை நேற்று விடுதலை செய்தது. மேலும், 28 பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது. காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் பிணைக் கைதிகள் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதியாக அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தனர்.

நவீன சைரஸ் மன்னர்!

இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறு த்தியதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பண்டைய பாரசீக மன்னரான மகா சைரஸ் உடன் இஸ்ரேலியர்கள் ஒப்பிடுகின்றனர். மகா சைரஸ் என்பவர் கி.மு.6ம் நுாற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற மன்னராவார். இவர் பண்டைய வரலாற்றில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக கருதப்படுகிறார். உலகிலேயே மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றாக விளங்கிய அகாமனிசிய பேரரசை நிறுவியவர். இதன் எல்லை கிரேக்கம் முதல் வடமேற்கு இந்தியா வரை பரவியிருந்ததாக கூறப்படுகிறது. பாபிலோனியர்கள் ஜெருசலேமில் உள்ள முதல் ஆலயத்தை அழித்தனர். மேலும், யூத தலைவர்களையும் பாபிலோனுக்கு நாடு கடத்தி சிறையில் அடைத்தனர். அதன்பின், கி.மு. 539ல் பாபிலோனை கைப்பற்றிய மகா சைரஸ், பாபிலோனியர்களால் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட யூதர்களை விடுவித்து, அவர்களை தங்கள் தாயகமான ஜெருசலேமிற்கு திரும்பி செல்ல உதவியதுடன், அழிக்கப்பட்ட ஆலயத்தையும் மீண்டும் கட்டியெழுப்ப அனுமதித்தார். சைரஸ், யூதராக இல்லாத போதிலும், யூதர்களுக்கு உதவியதால் அவரை கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட துாதராக கருதுகின்றனர். இதேபோன்றதொரு உதவியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்கால யூதர்களுக்கு செய்து வருவதால், அவரை நவீன கால சைரஸ் என இஸ்ரேலியர்கள் அழைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ