போரை நிறுத்த 20 அம்ச திட்டம்: இஸ்ரேல் ஏற்றது; ஹமாஸ் மவுனம்; 3 நாள் கெடு விதித்தார் அமெரிக்க அதிபர்
வாஷிங்டன்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 20 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதை ஏற்பதாக இஸ்ரேல் கூறியுள்ள நிலையில், ஹமாஸ் மவுனம் காக்கிறது. இதையடுத்து அந்த அமைப்புக்கு மூன்று நாள் கெடு விதித்துள்ளார் டிரம்ப். மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, கடந்த, 2023 அக்., 7ல் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து ஹமாஸ் மீது இஸ்ரேல் துவங்கிய போர், இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ளது. இந்தப் போரில் காசா தரப்பில், 66,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் தவிப் பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதன் ஒரு கட்டமாக, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பல நாடுகள் கூறியுள்ளன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இம்மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகை யில் 20 அம்ச அமைதித் திட் டத்தை முன் மொழிந்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில், நேற்று முன்தினம் இரவு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது அமைதி திட்டம் குறித்து நெதன்யாகுவிற்கு, டிரம்ப் எடுத்து கூறினார். அதை நெதன்யாகு ஏற்றுக் கொண்டுள்ளதாக, டிரம்ப் அறிவித்துள்ளார். ஹமாஸ் ஒப்புக்கொண்டால் போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும் என்றும், இல்லையென்றால் இஸ்ரேல் ராணுவ நடிவடிக்கை வாயிலாக ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழிக்க, இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முயற்சியை ஏற்பதாக, அதன் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஆனால், இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து பதிலளிப்பதாக, ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, மூன்று நாட்களுக்குள் திட்டத்தை ஏற்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என, ஹமாஸ் அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முக்கிய அம்சங்கள்
காசா மீதான ஹமாசின் அரசியல் மற்றும் ராணுவ கட்டமைப்பை கலைப்பதே இந்த அமைதி திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். * ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, வெடிபொருள் சுரங்கங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி நிலையங்கள் உட்பட ராணுவ கட்டமைப்புகளை கலைக்க வேண்டும்; இது கண்காணிக்கப்படும் * ஹமாஸ் அமைப்பு, நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது எந்த வடிவத்திலோ காசா அரசில் எந்த பதவியும் வகிக்காது உயிருடன் அல்லது இறந்த அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும் திருப்பி அனுப்ப வேண்டும். பதிலுக்கு ஆயுள் தண்டனை அனுபவித்த 250 பாலஸ்தீனியர்களையும், மோதல் துவங்கியதில் இருந்து கைது செய்யப்பட்ட அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளையும் சேர்த்து 1,700 காசா மக்களையும், இஸ்ரேல் விடுவிக்கும். கூடுதலாக, இறந்த இஸ்ரேலிய பிணைக் கைதிகளை திருப்பி தந்தால், போரின் போது கொல்லப்பட்ட 15 பாலஸ்தீனியர்களின் உடல்களை இஸ்ரேல் திருப்பியளிக்கும் * அமைதியான வாழ்வுக்கு உறுதியளிக்கும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு காசாவில் இருக்க பொது மன்னிப்பு வழங்கப்படும். அங்கிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கு, அவர்களை ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு பாதுகாப்பான பயணம் வழங்கப்படும் * போர் முடிவுக்கு வந்ததும், ஆரம்பத்தில் அரசியல் சார்பற்ற பாலஸ்தீன குழுவால் காசா நிர்வகிக்கப்படும். இக்குழுவில் தகுதிவாய்ந்த பாலஸ்தீனியர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் இருப்பர். பொது சேவைகள் மற்றும் நகராட்சி நிர்வாகத்துக்கு இக்குழு பொறுப்பேற்கும் * இந்த இடைக்காலக் குழு, அமைதி வாரியம் என்ற ஒரு புதிய சர்வதேச அமைப்பால் கண்காணிக்கப்படும். இவ்வாரியத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமை தாங்குவார். பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் போன்ற உலக தலைவர்களும் இதில் இடம் பெறுவர். இவ்வாரியம் காசாவின் புனரமைப்புக்கான நிதி மற்றும் கட்டமைப்புகளை நிர்வகிக்கும் * தற்போதைய பாலஸ்தீன அதிகார சபை, ஒரு சீர்திருத்தத் திட்டத்தை நிறைவு செய்த பின்னரே, காசாவின் கட்டுப்பாட்டை எடுக்க முடியும். ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்த காலக்கெடு அறிவிக்கப்படவில்லை. இந்த அமைதி திட்டம் பற்றி சுருக்கமாக கூறுவதென்றால், ஹமாசை அதிகாரத்தில் இருந்து அகற்றி, அதற்கு பதிலாக சர்வதேச மேற்பார்வையில் ஒரு நிர்வாகத்தை நிறுவி, இறுதியில் கட்டுப்பாட்டை பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்க முன்மொழிகிறது.
பிரதமர் மோடி வரவேற்பு!
அமைதி திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: காசா மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான விரிவான திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம். இது பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய மக்களுக்கும், மேற்கு ஆசிய பிராந்தியத்திற்கும், நீண்டகால மற்றும் நிலையான அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஒரு சாத்தியமான பாதையை வழங்குகிறது. சம்பந்தப்பட்ட அனைவரும் அதிபர் டிரம்பின் முன்முயற்சிக்கு பின்னால் ஒன்றிணைந்து மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை பெறுவதற்கான இம்முயற்சியை ஆதரிப்பர் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகத் தலைவர்கள் பாராட்டு
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் : இத்திட்டத்தின் அடிப்படையில் இஸ்ரேல் உறுதியுடன் ஈடுபடும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவித்து, இந்த அமைதி திட்டத்தை பின்பற்றுவதைத் தவிர ஹமாசுக்கு வேறு வழியில்லை. இத்தாலி அதிபர் ஜார்ஜியா மெலோனி : இந்த அமைதித் திட்டம், ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். இது மோதலை நிரந்தரமாக நிறுத்துவதற்கும், அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவிப்பதற்கும், பொதுமக்களுக்கு முழுமையான மற்றும் பாதுகாப்பான மனிதாபிமான அணுகலை அனுமதிப்பதற்கும் வழிவகுக்கும். பல உலக நாட்டுத் தலைவர்களும், இந்த முயற்சிக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் நாடுகள் வரவேற்பு
இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர முன்மொழிந்துள்ள அமைதி திட்டத்துக்கு எட்டு முக்கிய முஸ்லிம் மற்றும் அரபு நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், துருக்கி, இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டு டிரம்பின் முயற்சிகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கும், செயல்படுத்தவதற்கும் அமெரிக்கா மற்றும் பிற தரப்பினருடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக அவை தெரிவித்துள்ளன.