உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிறப்பால் குடியுரிமை பெற டிரம்ப் தடை; எதிர்த்து 22 மாகாணங்கள் வழக்கு

பிறப்பால் குடியுரிமை பெற டிரம்ப் தடை; எதிர்த்து 22 மாகாணங்கள் வழக்கு

வாஷிங்டன்: பிறப்பால் அமெரிக்க குடியுரிமை வழங்குவதற்கு தடை விதித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, 22 மாகாணங்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், 20ம் தேதி பதவியேற்றார். முதல் நாளிலேயே, பிறப்பால் குடியுரிமை வழங்கப்படுவதில் சில கட்டுப்பாடுகளை விதித்து அவர் உத்தரவு பிறப்பித்தார்.தாய் அல்லது தந்தையின் குடியுரிமை எந்த நிலையில் இருந்தாலும், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு, அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்தில், 14வது திருத்தம் இந்த உரிமையை வழங்குகிறது.ஆனால், இதில் சில கட்டுப்பாடுகளை விதித்து, டொனால்டு டிரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்கப் படாது.

வழங்க முடியாது

அதுபோல, தற்காலிகமாக, அதாவது வேலைக்காக அமெரிக்காவுக்கு வந்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் தானாகவே குடியுரிமை வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவு, பிப்., 19 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக, அதிபரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே பிறந்தவர்கள், அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களுக்கு சிக்கல் இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனாலும், ஏற்கனவே உள்ளவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.இந்த உத்தரவுக்கு பல மாகாணங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மொத்தமுள்ள, 50 மாகாணங்களில், 22 மாகாணங்கள், இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன.

நடைமுறைகள்

இது குறித்து மாகாணங்களின் தலைமை வழக்கறிஞர்கள் கூறியுள்ளதாவது:

அதிபருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது; ஆனால் அரசு அரசர் அல்ல. நுாறாண்டுக்கு மேலாக நடைமுறையில் உள்ள சட்டத்தில் அவரால் திருத்தம் செய்ய முடியாது. அதற்கு பல நடைமுறைகள் உள்ளன. பார்லிமென்டில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.,க்கள் ஒப்புதல் பெற வேண்டும். மேலும், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாகாணங்கள் ஒப்புதல் வழங்க வேண்டும்.தான் நினைத்தபடி, சட்டத்தை அவரால் திருத்த முடியாது. சட்டம் ஏற்கனவே வழங்கியுள்ள உரிமைகளையும் அவரால் பறிக்க முடியாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதற்கிடையே, சட்டவிரோதமாக தங்கியுள்ள அனைவரையும் வெளியேற்றும் உத்தரவையும் டிரம்ப் பிறப்பித்துள்ளார். இது நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள, 18,000 இந்தியர்கள் வெளியேற்றப்படுவர் என்று கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு முன்னுரிமை

அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்து உள்ளது. புதிய நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர், தங்களது முதல் இரு தரப்பு மற்றும் சர்வதேச சந்திப்பாக, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்தினர்.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், 20ம் தேதி பதவியேற்றார். ஏற்கனவே அவர் அதிபராக இருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறந்த நட்பு உள்ளது. இருப்பினும் புதிய நிர்வாகத்தின் முன்னுரிமைகள், வெளியுறவு கொள்கைகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.இந்நிலையில், டிரம்பின் அழைப்பை ஏற்று, அதிபர் பதவியேற்பு விழாவில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அவருக்கு முதல் வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது.புதிய அரசு பதவியேற்றதும், 'குவாட்' எனப்படும் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் அடங்கிய சர்வதேச அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், இந்த சந்திப்பு தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை. அமைச்சர்களும், பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை.இதைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபாயோ, தன் முதல் இரு தரப்பு மற்றும் சர்வதேச சந்திப்பாக, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவை தொடர்பாக இருவரும், ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசியதாக, வெளியுறவுத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ஸ், தன் முதல் இருதரப்பு மற்றும் சர்வதேச சந்திப்பாக, ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.வழக்கமாக புதிய நிர்வாகம் அமைந்தவுடன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள், தங்களுடைய அண்டை நாடான கனடா அல்லது மெக்சிகோ அல்லது நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளுடன் ஆலோசனை நடத்துவர்.டிரம்ப் நிர்வாகத்தின் முதல் இருதரப்பு மற்றும் சர்வதேச சந்திப்பாக, இந்தியாவுடன் அமைந்துள்ளது. இதன் வாயிலாக, இந்தியாவுடனான உறவுக்கு அமெரிக்கா முன்னுரிமை கொடுக்கிறது என்பது தெளிவாகிறது.

எச்1பி விசாவுக்கு கட்டுப்பாடா?

அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் எச்1பி விசாவில் பல கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று டிரம்ப் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த விசாவை அதிகம் பயன்படுத்தும் நாடுகளாக இந்தியா மற்றும் சீனா உள்ளன. தற்போதைக்கு ஆண்டுக்கு, 65,000 பேருக்கும், இதைத் தவிர, அமெரிக்காவில் படிக்கும், 20,000 வெளிநாட்டு மாணவர்களுக்கும், எச்1பி விசா வழங்கப்படுகிறது.இந்நிலையில், ஆரக்கிள் தலைவர் லேரி எலிசன், சாப்ட்பேங்க் தலைமை செயல் அதிகாரி மாசாயோஷி சோன், ஓபன் ஏ.ஐ., தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் ஆகியோரை, டொனால்டு டிரம்ப் நேற்று சந்தித்தார். அவர்களுடன் இணைந்து அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியதாவது:எச்1பி விசா குறித்த இரு தரப்பு வாதங்களையும் நான் விரும்புகிறேன். நானும் என்னுடைய நிறுவனத்துக்காக இந்த விசாவை பயன்படுத்தியுள்ளேன். நம் நாட்டுக்கு நல்ல திறன் உடையவர்கள் தேவை. வெளிநாடுகளில் இருந்து அவ்வாறு வருவோரை ஏற்கத் தயாராக உள்ளேன். நான் இன்ஜினியர்களை மட்டும் கூறவில்லை. அனைத்து துறைகள் பற்றியும் பேசுகிறேன். அவர்களிடம் இருந்து, அதுபோன்ற தகுதி மற்றும் திறன் இல்லாத அமெரிக்கர்கள் கற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில், அவர்களை வரவேற்கிறேன்.அதே நேரத்தில் நல்ல தகுதியுள்ள, திறன் உள்ளவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

GMM
ஜன 23, 2025 08:31

சட்ட விரோத வெளிநாட்டு பெற்றோர் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடையாது. சரியான உத்தரவு தான். சட்ட விரோத செயலை ஆதரித்து வழக்கு தொடுக்கும் வழக்கறிஞர் கைது செய்ய வேண்டும். விசாரிக்கும் நீதிபதி பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் அமெரிக்க பாராளுமன்றத்தில் ஓட்டு பெற கள்ள குடியேறிகளை ஆதரிப்பர். தவறான உரிமை கூடாது. நூறாண்டு நடைமுறை இருந்தாலும் அது சட்டம் ஆகாது. சட்டம் தவறான உரிமை வழங்க கூடாது. அது செல்லாது.


Kasimani Baskaran
ஜன 23, 2025 08:20

வேலைக்கு செல்வோர், நிரந்தரவாசம் வைத்திருப்போர் போன்றோர் பல நாடுகளில் தங்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு குடியுரிமை கோர முடியாது. தாய், தந்தை எந்த நாட்டு குடியுரிமை வைத்திருக்கிறார்களோ அந்த நாடுகள் குடியுரிமை கொடுக்கும்.


chennai sivakumar
ஜன 23, 2025 07:48

ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் குழந்தை பெற்று கொண்டாலும் அவர்களுக்கு ஜப்பான் பாஸ்போர்ட் குடியுரிமை கிடையாது. அந்த குழந்தைகளுக்கு இந்திய பாஸ்போர்ட் மட்டுமே. இது சொந்த அனுபவம்.


M Ramachandran
ஜன 23, 2025 03:56

சாகிட்ட திருத்தை பார்த்தல் இந்திய வம்சாவழியினருக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது. திருட்டு குடியறிவார்கள் அவர்களால் தான் பிரச்சனை. இதே பிரச்சனை இங்கிலாந்து நாட்டிலும் விஸ்வ ரூபம் எடுத்திருக்கு. தீர்க்க முடியாமால் திண்டாடுகிறார்கள். உண்மையாய் வரி கட்டுபவர்கள் திண்டாடுகிறார்கள். திருட்டு தனமாக குடியேரியவர்கள் வேலையில் அமர்ந்திருந்தாலும் சம்பளத்தை கணக்கில் காட்டாமல் அரசு கொடுக்கும் மானியம் அத்தனையும் முழுங்குவது மட்டு மல்லாமல் பல தகிடு தத்த வேலையயையும் செய்கிறார்கள்.


kannan
ஜன 23, 2025 03:34

இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டால் இந்தியர் ஆக முடியாது. ஆனால் இந்தியர்கள் அமெரிக்கா போய் பெற்றுக் கொண்டால் அமெரிக்கர் ஆகவேண்டும் என்று கேட்க முடியுமா?


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 23, 2025 01:45

நம்ம ஆர்என் ரவி ஆர்டர் போட்ட கதை தான். தன்னோட இருப்பு தெரியாமல் துள்ளுவது, கோர்ட்டில் ஜாடாக குட்டு வாங்குவது.


Sathyan
ஜன 23, 2025 09:02

உங்க முஸ்லீம் கும்பல் எங்கிருந்தாலும் பிரச்சனை தான்,


சமீபத்திய செய்தி