| ADDED : நவ 15, 2025 12:40 AM
இஸ்லாமாபாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தானில், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் - -இ - -தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக உளவுத்துறை எச்சரித்து வருகிறது. குறிப்பாக, அவர்கள் ஆப்கானிஸ்தானை ஒட்டிய கைபர் பக்துங்க்வா, பலுசிஸ்தான் மாகாணங்களில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் பஜாவூர், கோஹத் மற்றும் கராக் மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் இறங்கினர். அப்போது, பஜாவூர் மாவட் டத்தின் காடர் கிராமத்தில், அதிகளவு பயங்கரவாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் மக்களை வெளியேற்றிவிட்டு கிராமத்தை சுற்றி வளைத்தனர். அங்கு நடந்த தாக்குதலில், 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதேபோன்று பாசித் கேல் என்ற இடம் அருகே போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது,பயங்கரவாதிகள், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். போலீசார் பதிலடி கொடுத்ததில் மூன்று பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். கராக் மாவட்டத்தில் சோதனை நடத்திய போலீசார், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர்.