| ADDED : செப் 18, 2024 06:59 AM
வாஷிங்டன்: லெபனான் நாட்டில் பேஜர் வெடித்த சம்பவத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. விஷயம் எங்களுக்கு முன்கூட்டியே தெரியாது என அமெரிக்கா செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்தார்.லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் ஹிஸ்புல்லாஆயுதக்குழுவினர் தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்தக் கருவிகள் நேற்று இரவு திடீரென வெடித்துச் சிதறின. இதனால் பேஜர் பயன்படுத்திய லெபனான் எம்.பி., மகன் உட்பட ஒன்பது பேர் பலியாயினர். 2,700க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர். சம்பவத்திற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.விஷயமே தெரியாது!
இந்த சம்பவத்திற்கும், அமெரிக்காவிற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து சந்தேகம் எழுந்தது. இதற்கு, அமெரிக்கா செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: இந்த சம்பங்களில் அமெரிக்காவிற்கு தொடர்பு இல்லை. யார் பொறுப்பு என்று தெரியவில்லை. அமெரிக்கா இதில் ஈடுபடவில்லை என்று என்னால் சொல்ல முடியும். இந்த சம்பவம் குறித்து விஷயம் எங்களுக்கு முன்கூட்டியே தெரியாது.அக்கறை
என்ன நடந்திருக்கக்கூடும் என்பது பற்றிய உண்மைகளை சேகரிக்க, உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் எப்படி இருக்கிறார்களோ, அதே வழியில் நாங்கள் தகவல்களைச் சேகரித்து வருகிறோம். மத்திய கிழக்கில் பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு சம்பவம் குறித்தும் அமெரிக்கா எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு மக்களை தண்டிக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.ஹிஸ்புல்லா ஆயுத குழுவினர் தங்கள் தகவல் தொடர்புக்காக தைவான் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் பேஜர்களை ஆர்டர் செய்திருந்தனர். இதை அறிந்த இஸ்ரேல் உளவு நிறுவனம் முன்கூட்டியே அந்த ஆர்டர் பார்சல் கைப்பற்றி பேஜர்களுக்குள் வெடி பொருட்களை வைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி பேஜர் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இதுவரை எந்தவிதமான விளக்கமும் வெளியிடப்படவில்லை. உலக அளவில் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி, பெரிய அளவில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுதான் என்று கூறப்படுகிறது.