7 வயது சிறுவன் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு
பலுசிஸ்தான்: பலுசிஸ்தானில் 7 வயது சிறுவனை பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் பாகிஸ்தான் போலீசார் கைது செய்ய முயன்றதற்கு, அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மாகாணம் பலுசிஸ்தான். இதனை, தனி நாடாக அறிவிக்கக் கோரி பலுாச் கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டாக போராடி வருகின்றனர். கடந்த மாதம் குவாடரில் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை கோரி நடந்த பேரணியின் போது உள்ளூர் சமூக ஆர்வலர் குல்சார் தோஸ்த் என்பவர் கண்டன உரையாற்றினார். இந்த வீடியோவை 7 வயது சிறுவன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளான். குல்சார் தோஸ்த்தின் வீடியோவை பகிர்ந்ததன் மூலம் வன்முறையைத் துாண்டியதாக சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் போலீசார், அச்சிறுவனை பயங்கரவாதக் குற்றச்சாட்டில் கைது செய்ய முயன்றனர். இதற்கு அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை, ஒரு பிரிவினருக்கு எதிராக பயன்படுத்துவது தீவிரமான ஒடுக்குமுறையை காட்டுவதாக ஆணையம் கண்டித்துள்ளது. சிறுவன் மீதான குற்றச்சாட்டுகளை கைவிடு மாறும் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் விடுவித்தனர்.