இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரயிலை கடத்திச் சென்று நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, அடுத்த அதிர்ச்சியாக, பாக்., ராணுவ வாகனங்கள் மீது, 'பலுச் விடுதலைப்படை' கிளர்ச்சியாளர்கள் நேற்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 90 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி, இயற்கை எரிவாயு என ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. மேற்காசிய நாடான ஈரான் எல்லையையொட்டி அமைந்த இந்த மாகாணம் தான், பாக்.,கின் கனிம வள ஆதாரம். தங்களை பாக்., புறக்கணிப்பதாகக் கூறி, தனி நாடு கேட்டு, 'பலுச் விடுதலைப்படை' என்ற கிளர்ச்சி அமைப்பு, தாக்குதல்களை நடத்தி வருகிறது. சீனா- - பாக்., இடையே, 'பிரத்யேக பொருளாதார வழித்தடம்' அமைக்கும் திட்டத்தையும் இவர்கள் சீர்குலைத்தனர். இந்நிலையில், கடந்த 11ம் தேதி, பலுசிஸ்தானின் குவெட்டாவில் இருந்து பெஷாவருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது, தண்டவாளத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்து, அதில் இருந்த 400க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். ரயிலில் ராணுவத்தினரே அதிக அளவில் பயணித்ததாகக் கூறப்படும் நிலையில், அனைத்து கிளர்ச்சியாளர்களையும் கொன்றுவிட்டு, பயணியர் அனைவரையும் மீட்டதாக பாக்., ராணுவம் கூறியது. ஆனால், தாங்கள் பிடித்து வைத்த 214 ராணுவ பிணைக்கைதி களையும் துாக்கிலிட்டு கொன்று விட்டதாக, பலுச் விடுதலைப்படை நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து பாக்., மீள்வதற்குள், நேற்று அடுத்த அதிரடி தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் நடத்தினர். பாக்., - -ஈரான் எல்லை அருகேயுள்ள டப்டான் என்ற இடத்துக்கு, எட்டு பஸ்களில் பாக்., ராணுவத்தினர் நேற்று காலை சென்று கொண்டிருந்தனர். பாக்., ராணுவ கான்வாய், பலுசிஸ்தான் மாகாணத்தின் ஆர்.சி.டி., நெடுஞ்சாலையில், நோஸ்க்கி என்ற இடத்தின் அருகே சென்றபோது, திடீரென வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்று குறுக்கே வந்து வெடித்து சிதறியது. இந்த அதிரடி தாக்குதலால், பஸ்சில் இருந்த பாக்., ராணுவத்தினர் உடல் சிதறி உயிரிழந்தனர். சில மணி நேரம் கழித்து, தாக்குதலுக்கு பொறுப்பேற்று, பலுச் விடுதலைப்படை அறிக்கை வெளியிட்டது. அதில், 'பாக்., ராணுவத்தினர் சென்ற பஸ் அணிவகுப்பை குறிவைத்து நடந்த தாக்குதலில், 90 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் வந்த எட்டு பஸ்களில், ஒரு பஸ் முற்றிலும் தகர்க்கப்பட்டது. அதில் இருந்த ஒருவர் கூட உயிர் தப்பவில்லை' என தெரிவித்தது. இந்த தாக்குதல் குறித்து, பாக்., ராணுவம் தரப்பில் இருந்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. ஆனால், 'ஈரான் எல்லைப் பகுதியை நோக்கி ஏழு பஸ்களில் துணை ராணுவத்தினர் சென்றபோது, ஒரு பஸ்சின் மீது கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்' என, பாக்., போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.