திருமணத்துக்கு மறுப்பு; காதலன் மீது ஆசிட் வீச்சு
லாகூர்: திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் வீசியதாக பாகிஸ்தானில் இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூருக்கு அருகில் உள்ள ஷாஹிவால் பகுதியைச் சேர்ந்தவர் ஷாருக், 32. இவர் நேற்று முன்தினம் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது ஆசிட் வீசப்பட்டது. இதில், அவர் பலத்த காயமடைந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், தன் முன்னாள் காதலி ஆயிஷா இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறினார். ஆயிஷாவும் ஷாருக்கும் காதலித்துள்ளனர். ஆனால், திருமணத்துக்கு ஷாருக் ஒப்புக் கொள்ளவில்லை. இதற்கிடையே ஆயிஷாவுக்கு வேறொருவருடன் திருமணம் நடந்தது. அதன்பிறகும், ஆத்திரம் தீராத ஆயிஷா, ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆயிஷா கைது செய்யப்பட்டு உள்ளார்.