UPDATED : அக் 22, 2024 04:52 PM | ADDED : அக் 22, 2024 04:47 PM
பீஜிங்: எல்லையில் ராணுவம் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியாவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை சீனா வரவேற்று உள்ளது. இதனை செயல்படுத்துவதில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவோம் எனவும் கூறியுள்ளது.கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ரோந்து படை மீது, சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. நம் வீரர்கள் எதிர்த்து தாக்கினர். மோதலில், 20 இந்திய ஜவான்கள் வீரமரணம் அடைந்தனர். அதை காட்டிலும் இரு மடங்கு சீன வீரர்களும் பலியாகினர். இதையடுத்து, இரு தரப்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன. இரு தரப்பு உறவில், 45 ஆண்டுகள் இல்லாத வகையில் விரிசல் ஏற்பட்டது; அரசியல், சமூக, பொருளாதார உறவிலும் பெரும் தாக்கம் உண்டானது.ராணுவ அளவிலும், வெளியுறவு அமைச்சக அளவிலும் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வந்தனர். எல்.ஏ.சி., பகுதியில் ஏழு ரோந்து இடங்கள் தொடர்பாக பிரச்னை இருந்தது. பல கட்ட பேச்சுக்குப் பின், ஐந்து இடங்களில் சமரசம் ஏற்பட்டு, படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. டெப்சாங்க், டெம்சோக் ஆகிய இடங்கள் தொடர்பாக மட்டும் பிரச்னை நீடித்தது. கடந்த நான்கு ஆண்டு களில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு துாதரக ரீதியில் 31 சுற்று, ராணுவங்களுக்கு இடையே 21 சுற்று பேச்சு நடந்தது. அதன் விளைவாக இப்போது, 2020 ஜூன் மாதத்துக்கு முன் இருந்த அளவில் இரு தரப்பும் ரோந்து செல்லலாம் என உடன்பாடு ஏற்பட்டுஉள்ளது.இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லன் ஜியான் கூறியதாவது: எல்லையில் ரோந்து பிரச்னை தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தீர்வு கிடைத்து உள்ளது. இதனை அமல்படுத்துவதில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம். நேர்மறையான தீர்வு காண்பதற்கு தூதரக மற்றும் ராணுவ ரீதியில் நெருங்கிய தொடர்பை கொண்டு இருந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.படிப்படியாக நம்பிக்கை
முன்னதாக இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 2020ம் ஆண்டுக்கு முந்தைய நிலையை ஏற்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு சிறிது காலம் ஆகும் எனக்கூறினார்.