சீனாவில் அஜித் தோவல்
பீஜிங்,இந்தியா - -சீனா சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சீனா சென்றார்.கிழக்கு லடாக்கில் உள்ள இந்தியா -- சீனா எல்லையில் கடந்த 2020 ஜூனில் இரு நாட்டு படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதனால் இந்தியா - சீனா உறவில் பெரும் விரிசல் விழுந்தது. இரு நாடுகளும் கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லையில் படைகளை குவித்திருந்தன. பல கட்ட பேச்சுகளுக்கு பின் இந்த பிரச்னையில் சுமூக தீர்வு எட்டப்பட்டு, கடந்த அக்டோபரில் சீனா படைகளை விலக்கியது. தற்போது, எல்லையில் 2020 ஜூனுக்கு முன் இருந்த நிலை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியா -- சீனா சிறப்புப் பிரதிநிதிகளின் 23வது சுற்று பேச்சுக்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று பீஜிங் சென்றார். அவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன், இருதரப்பு உறவுகளை மீண்டும் புதுப்பிப்பது, கிழக்கு லடாக்கில் இரு நாட்டு ராணுவம் மேற்கொள்ளும் ரோந்துப் பணி ஆகிய விஷயங்களை விவாதிக்க உள்ளார்.