உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் சதி? மர்ம நபர்களின் துப்பாக்கிச்சூடு முயற்சி முறியடிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் சதி? மர்ம நபர்களின் துப்பாக்கிச்சூடு முயற்சி முறியடிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தில், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த இருந்த முயற்சியை, எப்.பி.ஐ., அதிகாரிகள் முறியடித்தனர். அமெரிக்க அதிபர் டிரம்பின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது. சோதனை இந்நிலையில், 'ஏர் போர்ஸ் ஒன்' என்ற தனி விமானத்தில் நேற்று முன்தினம் பயணித்த டிரம்ப், பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். விமானம் தரையிறங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், விமான நிலையம் அருகே 200 மீட்டர் தொலைவில், சந்தேகத்துக்குரிய வகையில் துப்பாக்கிச்சூடு நடத்த ஏதுவான உயரமான தளம் அமைக்கப்பட்டிருப்பதை, அமெரிக்காவின் எப்.பி.ஐ., எனப்படும் புலனாய்வு ஏஜென்சியின் கீழ் இயங்கும் ரகசிய சேவைப் பிரிவினர் கண்டறிந்தனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், விமானத்தில் ஏறும் மற்றும் இறங்கும் இடத்தை தெளிவாக குறிவைத்து அத்தளம் அமைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.உடனே, அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அதிகாரிகள், சுற்றுவட்டாரங்களில் சோதனை நடத்தினர். எனினும், சந்தேகிக்கும்படியான நபர்கள் அங்கு யாரும் இல்லை. முன்னெச்சரிக்கை இதையடுத்து, அத் தளத்தை அதிகாரிகள் உடனே அகற்றினர். இதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உயரம் குறைவான படிக்கட்டுகளை பயன்படுத்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் விமானத்தில் இருந்து பின்பக்கம் வழியாக கீழே இறங்கினார். முன்னதாக, கடந்த 2024 ஜூலையில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் டிரம்ப் பிரசாரம் செய்தபோது, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது காதை குண்டு உரசி சென்றதில் காயம் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதேபோல், அடுத்த இரு மாதங்களுக்குப்பின், கோல்ப் மைதானத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற, 59 வயதான ரியான் வெஸ்லே என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ