செக் குடியரசு பிரதமராக கோடீஸ்வரர் ஆண்ட்ரேஜ் பதவியேற்பு
பிராக்: ஐரோப்பிய நாடான செக் குடியரசின் புதிய பிரதமராக கோடீஸ்வரரும், மக்கள் செல்வாக்கு மிக்கவருமான ஆண்ட்ரேஜ் பாபிஸ், 71, நேற்று பதவியேற்றார். செக் குடியரசை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர் பாபிஸ். தொழிலதிபரான இவர் ரசாயனம், உணவு, கட்டுமானம், எரிசக்தி ஆகிய துறைகளில் 200 நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவருக்கு 35,000 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு உள்ளது. இந்நிலையில், 2011ல் ஏ.என்.ஓ., என்ற பெயரில் அதிருப்தி குடிமக்கள் கட்சியை துவக்கினார். 2017ல் முதன் முறையாக செக் குடியரசின் பிரதமராக பதவி யேற்றார். முழுமையாக நான்கு ஆண்டுகள் பதவி வகித்த அவர், 2021ல் நடந்த பொது தேர்தலில் தோல்வியை தழுவினார். கடந்த அக்டோபரில் மீண்டும் பார்லிமென்ட்டுக்கான தேர்தல் நடந்தது. இரு சிறிய கட்சிகளுடன் இணைந்து பாபிஸின் ஏ.என்.ஓ., கட்சி போட்டியிட்டது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 108 தொகுதிகளை இந்த கூட்டணி கைப்பற்றியது. பெரும்பான்மை பெற்றதால் ஆட்சியமைக்க பாபிசு க்கு, அந்நாட்டு ஜனாதிபதி பீட்டர் பாவெல் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று செக் குடியரசின் பிரதமராக பாபிஸ் நேற்று பதவியேற்றார். அவருடன் 16 அமைச்சர்களும் பதவியேற்றனர்.