பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தை ஒடுக்க பிரிட்டன் அரசு தீவிரம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான தொடர் போராட்டங்கள் பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதால், அத்தகைய போராட்டங்களை கட்டுப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா மீது போர் துவங்கியது முதல், பிரிட்டனில் பாலஸ்தீனுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் அமைதியாக நடந்தாலும், இதில் சிலர் யூத விரோத கோஷங்களை எழுப்புகின்றனர். மேலும், பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ஹமாசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக சில போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக 'பாலஸ்தீன் ஆக்ஷன்' அமைப்பினர் பிரிட்டிஷ் ராணுவ விமானங்கள் மற்றும் இஸ்ரேல் ராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை குறிவைத்து சேதப்படுத்தினர். எனவே இந்த அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஆதரவாக லண்டனின் டிராபால்கர் சதுக்கத்தில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். அவர்களில் 500 பேர் கைது செய்யப்பட்டனர். இது போன்ற போராட்டங்கள் தொடர்வதால் அவற்றை கட்டுப்படுத்த புதிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிய விதிமுறையின்படி, ஒரே பகுதியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இருந்தால், போலீசார் கடும் நிபந்தனைகளை விதிக்கலாம் என்ற அதிகாரம் வழங்கப்பட உள்ளது.