ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற இந்தியாவுக்கு பிரிட்டன் பிரதமரும் ஆதரவு
நியூயார்க்: 'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக சேர்க்க வேண்டும்' என, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமரும் ஆதரவு தெரிவித்து உள்ளார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், 15 நாடுகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. அவற்றில், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே, 'வீட்டோ' அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. மீதமுள்ள 10 நாடுகள், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படும் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன. உலகளவில் தற்போது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வரும் இந்தியாவை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்க்க வேண்டும் என, பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும் சீனா இதற்கு உடன்படவில்லை. அமெரிக்காவின் நியூயார்க்கில், ஐ.நா., பொது சபையின், 79வது அமர்வில் சமீபத்தில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், 'ஐ.நா.,வை மேலும் திறனுடையதாக மாற்ற வேண்டும். ஜெர்மனி, ஜப்பான், இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்' என்றார்.பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமரும் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக சேர்க்க குரல் கொடுத்துள்ளார்.ஐ.நா., பொது சபையில் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் கூறியதாவது:அதிக நாடுகளை உடைய அமைப்பாக பாதுகாப்பு கவுன்சில் மாற வேண்டும். இந்த விஷயத்தில் எந்தவிதமான அரசியலுக்கும் இடம் அளிக்கக் கூடாது. பிரேசில், இந்தியா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளை, பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்க்க வேண்டும். ஆப்ரிக்காவையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் அதிக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்,ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.
ஐ.நா., பொதுச்செயலருடன்
ஜெய்சங்கர் சந்திப்புஐ.நா., பொது சபையின், 79வது அமர்வில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா., பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸை நேற்று சந்தித்தார். அப்போது காலநிலை மாற்றம், மேற்கு ஆசியா, உக்ரைன் பதற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் பேச்சு நடத்தினார். தொடர்ந்து, ஐ.நா., பொது சபையின் புதிய தலைவர் பிலேமன் யாங்கை, அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். மேலும், பெலாரஸ், ரோமானியா, மாண்டினீக்ரோ, மொராக்கோ, எகிப்து, ஸ்லோவேனியா, ஜோர்டான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.