வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக வைத்து, 'சீக்கியருக்கான நீதி' என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவராக, காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுான் உள்ளார். அமெரிக்காவில் வைத்து இவரை கொலை செய்ய, இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டியது. இதை நம் நாடு திட்டவட்டமாக மறுத்தது. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியர் நிகில் குப்தா என்பவர் செக் குடியரசில் கைது செய்யப்பட்டார். பின் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.இந்நிலையில், குர்பத்வந்த் சிங் பன்னுானை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக, 'ரா' எனப்படும், நம் நாட்டின் உளவுத் துறையின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ், 39, மீது அமெரிக்க அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. கூலிப்படையை ஏவுதல், பண மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பன்னுானை கொலை செய்வதற்கான சதித் திட்டத்தின் பின்னணியில் விகாஷ் யாதவ் இருந்தார் என்றும், இந்த கொலையை செயல்படுத்த, நிகில் குப்தா என்பவரை அவர் நியமித்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பிரதமர் ட்ரூடோவுக்கு கண்டனம்
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதுகுறித்து, கனடாவின் எதிர்க்கட்சியான, கனடா மக்கள் கட்சியின் தலைவர் மாக்சிம் பெர்னியர் கூறியதாவது:ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜன்ட்டுகளுக்கு தொடர்பு இருந்தால், அது மிகவும் தீவிரமானவை; உரிய முறையில் கையாளப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் இதுவரை எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. இந்த கொலை வழக்கை வைத்து கொண்டு, நாட்டின் மற்ற பிரச்னைகளில் இருந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மக்களை திசை திருப்பி வருகிறார். நிஜ்ஜார் ஒரு வெளிநாட்டு பயங்கரவாதி. கனடாவில் தஞ்சம் கோருவதற்காக அவர் பல முறை மோசடி ஆவணங்களைப் பயன்படுத்தி உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.