உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்

கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்

வாட்டிகன் சிட்டி: உலகம் முழுதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், 88, இத்தாலியின் வாட்டிகன் சிட்டியில் நேற்று காலமானார்.கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவராக இருந்தவர் போப் பிரான்சிஸ். ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகரில் உள்ள புனித பீட்டர்ஸ் சர்ச்சில் வசித்து வந்தார். பிப்., 14ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக, ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுநீரகச் செயலிழப்பு

அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது. மேலும், வைரஸ்கள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல்வேறு வகையான தொற்று பாதிப்பும் கண்டறியப்பட்டன. அதோடு லேசான, ஆரம்பக்கட்ட சிறுநீரகச் செயலிழப்பு நிலையில் அவர் இருந்ததும் கண்டறியப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நலம் தேறியதை அடுத்து, மார்ச் 23ல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வாட்டிகன் திரும்பிய அவர், இரண்டு மாத கட்டாய ஓய்வில் இருந்தார். இருப்பினும், வாட்டிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் சர்ச் பால்கனியில் இருந்து மக்களுக்கு அவ்வப்போது ஆசி வழங்கி வந்தார்.இத்தாலி வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கடந்த 19ம் தேதி போப் பிரான்சிசை சந்தித்து ஆசி பெற்றார். அதற்கு அடுத்த நாளான நேற்று முன்தினம், ஈஸ்டர் பண்டிகையையொட்டி, வாட்டிகன் முன் திரண்ட பக்தர்களுக்கு போப் பிரான்சிஸ் ஆசி வழங்கினார். இந்நிலையில், சற்றும் எதிர்பாராதவிதமாக நேற்று காலை 7:35 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக வாட்டிகன் அறிவித்தது.தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவைச் சேர்ந்த போப் பிரான்சிசின் இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ. போப் பெனடிக்ட் பதவியை ராஜினாமா செய்த பின், 2013ல் போப் பிரான்சிஸ் பதவி ஏற்றார்.கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு உடல்நல பாதிப்புகளால் அவர் அவதிப்பட்டு வந்தார். அவரது மறைவுக்கு, உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.போப் உடல், புனித பீட்டர்ஸ் சர்ச் வளாகத்திற்குள் அடக்கம் செய்யப்படுவது மரபு. ஆனால், தன் உடலை ரோமில் உள்ள சான்டா மரியா மாகியோர் சர்ச்சில் அடக்கம் செய்யும்படி போப் பிரான்சிஸ் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். கடந்த 100 ஆண்டு களில் வாட்டிகனுக்கு வெளியே போப் உடல் அடக்கம் செய்யப்படுவது இதுவே முதன்முறை.

தேர்வு முறை எப்படி?

போப் காலமான செய்தியை அதிகாரப்பூர்வமாக வாட்டிகன் அறிவித்ததும், அவர் வசித்த வீடு பூட்டப்படும். அதன் பின், 4 - 6 நாட்களுக்குள் இறுதிச்சடங்கு நடத்தப்பட வேண்டும். போப் காலமாகி, 15 - 20 நாட்களுக்கு பிறகே அடுத்த போப் தேர்வு துவங்கும். 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் ஒன்றுகூடி ரகசியமாக நடத்தும் ஓட்டெடுப்பில், மூன்றில் இரண்டு பங்கு ஓட்டு பெறும் நபர், அடுத்த போப் ஆக தேர்வு செய்யப்படுவார்.

பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:போப் பிரான்சிஸ் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்கர்களுக்கு இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் பரிவு, பணிவு மற்றும் ஆன்மிக கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுபடுத்தப்படுவார்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.போப் மறைவுக்கு மத்திய அரசு மூன்று நாள் அரசு முறை துக்கம் அறிவித்துள்ளது.-தமிழகத்தில், --காருண்யா பல்கலைக் கழக வேந்தரும், 'இயேசு அழைக்கிறார்' நிறுவன தலைவருமான பால் தினகரன், போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை