உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சாம்பியன்ஸ் டிராபி இன்று ஆரம்பம்; சாதிக்குமா இந்திய அணி?

சாம்பியன்ஸ் டிராபி இன்று ஆரம்பம்; சாதிக்குமா இந்திய அணி?

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று(பிப்.,19) ஆரம்பாகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து மோதுகின்றன.பாகிஸ்தானில் 9வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப். 19- மார்ச் 9) நடக்க உள்ளது. ஒருநாள் போட்டி 'ரேங்கிங்' பட்டியலில் 'டாப்-8' அணிகள் களம் காண்கின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடக்க உள்ளன. முன்பு 'மினி உலக கோப்பை' என அழைக்கப்பட்ட இத்தொடர், 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடக்க உள்ளது. கடைசியாக 2017ல் நடந்த தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

வலுவான 'பேட்டிங்'

இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற உற்சாகத்தில் உள்ளது. இத்தொடரில் சதம் அடித்த கேப்டன் ரோகித் சர்மா, அரைசதம் விளாசிய கோலி 'பார்மை' மீட்டது நல்ல விஷயம். துணை கேப்டன் சுப்மன் கில் விளாச தயாராக உள்ளார். ஸ்ரேயாஸ், அக்சர் படேல், ராகுல், ஹர்திக் பாண்ட்யா என பேட்டிங் படை பலமாக உள்ளது.

5 'ஸ்பின்னர்' வியூகம்

பந்துவீச்சில் பும்ரா இல்லாதது பலவீனம். ஷமி மீதான சுமை அதிகரிக்கும். அர்ஷ்தீப், ஹர்ஷித் ராணா சாதிக்கலாம். அக்சர், குல்தீப், ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் என 5 'ஸ்பின்னர்'கள் உள்ளனர். சமீபத்தில் துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த 15 ஐ.எல்., 'டி-20' போட்டியில் 'வேகங்கள்' 116 விக்கெட் (68.2 சதவீதம்) வீழ்த்தினர். 'ஸ்பின்னர்'கள் 54 விக்கெட் (31.8 சதவீதம்) தான் கைப்பற்றினர்.இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஐக்கிய எமிரேட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான லால்சந்த் ராஜ்புட் கூறுகையில், ''துபாயில் குளிர்காலம் நீடிப்பதால், 'வேகங்கள்' சாதிக்கலாம். இந்திய அணியில் 5 ஸ்பின்னர்கள் இடம் பெற்றிருப்பது வியப்பு அளிக்கிறது,'' என்றார். இத்தகைய விமர்சனங்களை கடந்து 'ஸ்பின்னர்'கள் அசத்தினால், இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றுவது உறுதி.

பாக் - நியூசி., முதல் மோதல்

இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) 'நடப்பு சாம்பியன்' பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. சொந்த மண்ணில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலமாக உள்ளது. சமீபத்தில் கராச்சியில் நடந்த முத்தரப்பு தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 355 ரன்னை சேஸ் செய்து வென்றது. கீப்பர், கேப்டன் ரிஸ்வான், பாபர் ஆசம், பகர் ஜமான், சல்மான் அகா, உஸ்மான் கான் விளாச காத்திருக்கின்றனர். பந்துவீச்சில் ஷாகீன் ஷா அப்ரிதி, நசீம் ஷா, 'ஸ்பின்னர்' அப்ரார் அகமது அசத்தலாம். 2023ல் பெங்களூருவில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை 21 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதே போல மீண்டும் வெற்றிக்கு முயற்சிக்கலாம்.

'ஹாட்ரிக்' கனவு

புதிய கேப்டன் சான்ட்னர் தலைமையில் நியூசிலாந்து அணி அசத்துகிறது. முத்தரப்பு தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பின் கராச்சியில் நடந்த பைனலில் மீண்டும் பாகிஸ்தானை சாய்த்து, கோப்பை வென்றது. இன்றும் அசத்தினால், 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யலாம். டேரில் மிட்சல், கிளன் பிலிப்ஸ், ரச்சின் என நிறைய 'ஆல்-ரவுண்டர்கள்' இருப்பது பலம். அனுபவ வில்லியம்சன், கான்வே, லதாம் ரன் மழை பொழியலாம். பந்துவீச்சில் ரூர்க்கே, மாட் ஹென்றி, சான்ட்னர் மிரட்டலாம்.சமீபத்திய முத்தரப்பு தொடரின் பைனலில் சந்தித்த தோல்விக்கு பதிலடி தர பாகிஸ்தான் காத்திருக்கிறது. மறுபக்கம் நியூசிலாந்து வெற்றிநடையை தொடர விரும்புவதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

AaaAaaEee
பிப் 19, 2025 14:18

துபாய் ஹாலிடே போர் இந்தியன் team


கிருஷ்ணதாஸ்
பிப் 19, 2025 11:46

சூதாட்டத்தில் வேண்டுமானால் சாதிக்கலாம், அவ்வளவுதான்!


பாமரன்
பிப் 19, 2025 06:49

சாதிக்கிற ஐடியால்லாம் இல்லீங்கோ... கப் கொண்டாந்தா அதிகபட்சம் நம்ம போர்ட் உருவாக்கிய ஒலக தலீவரு பிரதமராண்ட கூட்டினு போயி ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்துவாப்ல அவ்ளோ தான்... சீரியஸாக ஆடி அடிகிடி பட்டுட்டுட்டா அடுத்து வரப்போற ஐபிஎல்லில் ஆட முடியாது... அதில் வரும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் மற்றும் இதர சொகங்களும் பூடும்... அதனால் வழக்கம் போல வழவழா கொழகொழான்னு வெள்ளாடிட்டு வந்து பேட்டி குடுப்போம்... மக்களும் அதைத்தான் விரும்பறாங்க...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை