UPDATED : மார் 20, 2025 07:06 PM | ADDED : மார் 20, 2025 06:28 PM
ஒட்டாவா: போதை மருந்து குற்றச்சாட்டில் தங்கள் நாட்டை சேர்ந்த நான்கு பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றி உள்ளதாக கனடா கூறியுள்ளது. அவர்களை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.போதை மருந்து, உளவு மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்குவோருக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இது குறித்த உரிய தகவல்களை அந்நாடு வெளியிடா விட்டாலும், உலகில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளில் சீனாவும் ஒன்று என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்து உள்ளன. அதேநேரத்தில் இரட்டை குடியுரிமையையும் சீனா அங்கீகரிக்கவில்லை. அந்நாட்டில், வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது என்பது அரிதான ஒன்றாகவே உள்ளது.இந்நிலையில், போதை மருந்து பிரச்னையில் இந்த ஆண்டு கைதான கனடாவை சேர்ந்த நான்கு பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றி உள்ளதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அந்த நான்கு பேரும் இரட்டை குடியுரிமை வைத்து இருந்தனர். அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கை நீண்ட காலமாக கண்காணித்து வருகிறோம். மரண தண்டனையை தடுக்க முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியதாகவும் தெரிவித்தார்.சீனா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பொறுப்பற்ற கருத்துகள் கூறுவதை கனடா நிறுத்த வேண்டும். சட்டப்படி தான் நாங்கள் செயல்பட்டு உள்ளோம். குற்றவாளிகள் குற்றம் செய்ததற்கான உறுதியான மற்றும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன. சீனாவின் இறையாண்மையை கனடா மதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.