உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குளிர் காலத்தில் பரவக்கூடியது தான் புதிய வைரஸ் குறித்து சீனா விளக்கம்

குளிர் காலத்தில் பரவக்கூடியது தான் புதிய வைரஸ் குறித்து சீனா விளக்கம்

பீஜிங்: ''சீனாவில் வழக்கமாக குளிர் காலத்தில் சுவாச தொற்றை ஏற்படுத்தக் கூடிய வைரஸ் தான் பரவி வருகிறது, இது குறித்து சீனாவுக்கு வரும் பயணியர் அச்சப்பட தேவையில்லை,'' என, அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறினார்.நம் அண்டை நாடான சீனாவின் பல்வேறு மாகாணங்களில், எச்.எம்.பி.வி., எனப்படும், 'ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்' என்ற தொற்று வேகமாக பரவத் துவங்கியுள்ளது. சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் பலர் முக கவசம் அணிந்து காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவியது. இந்த வைரஸ் குறித்து நம் நாட்டின் தேசிய சுகாதார சேவைகள் இயக்குனர் அதுல் கோயல் கூறுகையில், ''சளி போன்ற அறிகுறிகளே இதனால் இருக்கும். வயதானவர்கள், குழந்தைகளுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் கவலையடையும் அளவுக்கு இது தீவிரமான விஷயமில்லை,'' என்றார்.இந்நிலையில், சீன மருத்துவமனை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களால் நிரம்பி வழியும் வீடியோ குறித்து, அந்த நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர் அளித்த பதில்: பொதுவாகவே வட அரைகோளத்தில் உள்ள நாடுகளில் குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்றுகள் உச்சத்தில் இருக்கும். அவற்றில் இருந்து மக்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்வது என்பது பற்றி சமீபத்தில் சீனாவின் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு தகவல்களை வழங்கியது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, சீனாவில் சுவாசத்தொற்று நோய்களின் தீவிரம் குறைவாகவும், சிறிய அளவில் பரவுவதாகவும் தெரிகிறது. சீன மக்கள் மற்றும் வெளிநாட்டினரின் ஆரோக்கியத்தில் சீன அரசு அக்கறை கொண்டுள்ளது. சீனாவுக்கு பயணம் செய்வது பாதுகாப்பானது. இந்த வைரஸ், வழக்கமாக குளிர்காலத்தில் பரவுவது தான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை