உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அண்டார்டிகா பனி படலத்தின் கீழுள்ள ஏரிகளை ஆய்வு செய்கிறது சீன குழு

அண்டார்டிகா பனி படலத்தின் கீழுள்ள ஏரிகளை ஆய்வு செய்கிறது சீன குழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: அண்டார்டிகாவின் பரிணாம வளர்ச்சி மற்றும் இயற்கை வளங்களை ஆராய்வதற்காக சீனா தன் 42வது அண்டார்டிகா ஆய்வு பயணக்குழுவை நேற்று அனுப்பி வைத்தது. உலகின் மிக குளிர்ந்த கண்டமான அண்டார்டிகாவின் இயற்கை வளங்களை பல்வேறு நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. சீனாவும், அண்டார்டிகாவில் ஆய்வு செய்வதற்காக ஏற்கனவே ஐந்து ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளது. இந்த மையங்களின் வாயிலாக ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள ஆய்வுக்குழு அவ்வப்போது அண்டார்டிகா பயணம் மேற்கொள்வது வழக்கம். இதன் ஒருபகுதியாக, இங்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ள தன், 42வது பயணக்குழுவை ஷாங்காயில் இருந்து சீனா நேற்று அனுப்பியுள்ளது. இக்குழு, அங்குள்ள பனி படலத்திற்கு அடியில் உள்ள ஏரிகளை துளையிட்டு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக இப்பயணக்குழுவின் தலைவரும், தலைமை விஞ்ஞானியுமான வெய் பூஹை தெரிவித்துள்ளார். அண்டார்டிகா பனி படலத்தின் அடியில் கிட்டத்தட்ட, 400க்கும் மேற்பட்ட ஏரிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏரிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பனிக்கு அடியில் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், அதிக அழுத்தம், குறைந்த வெப்பநிலை மற்றும் சூரிய ஒளி இல்லாத சூழலில் வாழும் திறன் கொண்ட, பூமியில் வேறெங்கும் காணப்படாத தனித்துவமான நுண்ணுயிர்கள் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இந்த ஏரிகளின் அடியில் உள்ள வண்டல் மண், பனி படலத்தின் வரலாறு மற்றும் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய புவி காலநிலை மாற்றங்களின் பதிவுகளை பாதுகாத்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இம்மாதிரிகளை ஆய்வு செய்வது, கடந்த காலத்தின் தீவிர காலநிலை நிகழ்வுகளை புரிந்து கொள்ள உதவும் என ஆய்வுக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அண்டார்டிகா கண்டம் முழுதும், 29 நாடுகளைச் சேர்ந்த, 70 நிரந்தர ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவிற்கு அண்டார்டிகாவில் மைத்ரி மற்றும் பாரதி என்ற இரு ஆராய்ச்சி மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அமெரிக்காவுக்கு, ஆறு மையங்களும், ஆஸ்திரேலியாவுக்கு, மூன்று மையங்களும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
நவ 02, 2025 07:03

மனித குலத்துக்கே சவாலான பகுதி என்று சொல்லப்படும் இடம் இதுதான். அட்லான்டிஸ் என்ற வெகுவாக முன்னேறிய கண்டம் ஒன்று பணிக்குள் உறைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.


முக்கிய வீடியோ