பாகிஸ்தான் தளபதி அசிம் முனீருக்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீரின் பதவி நீட்டிப்புக்கு ஏதுவாக, அரசியல் சாசனத்தின் 243 பிரிவில் 27வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா அந்த நாட்டின் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவி வகித்தாலும், ஆட்சியை வழி நடத்துவது என்னவோ அந்நாட்டின் ராணுவமே ஆகும். இம்மாத இறுதியுடன் அந்நாட்டு ராணுவ தளபதியான அசிம் முனீரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. தற்போது முனீர், 'பீல்டு மார்ஷல்' எனும் அந்தஸ்தில் உள்ளார். அந்த வகை உயர் பிரிவுக்கு, பதவி நீட்டிப்பு செய்ய அரசியலமைப்பு சட்டத்தில் வாய்ப்பு இல்லை. ஆகையால், அசிம் முனீருக்காக புதிய பதவி ஒன்றை உருவாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்து, அரசியலமைப்பு சட்டத்தின் 243வது பிரிவில் 27வது திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதாவை அந்நாட்டு பார்லிமென்டில் தாக்கல் செய்தது. இத்திருத்தத்தின்படி, பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்படும்.இந்த பதவி ராணுவம், கடற்படை மற்றும் விமான படைகளை ஒருங்கிணைக்கும் தலைமை பதவியாகும். இப்பதவி உருவாக்கப்படுவதையடுத்து, நீண்டகாலமாக இந்த மூன்று படைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை கையாளும் கூட்டுப் படைகளின் தலைமை தளபதி பதவி ஒழிக்கப்படும் என கூறப்படுகிறது. அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி, ராணுவ தளபதியே, பாதுகாப்பு படைகளின் தலைவராகவும் பதவி வகிப்பார் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. மேலும், இப்பதவிக்கான நபரை, பிரதமரின் ஆலோசனையின்படி அந்நாட்டு அதிபர் நியமிப்பார் என கூறப்பட்டுள்ளது.