பாக். சுப்ரீம்கோர்ட் உணவகத்தில் வெடித்த கேஸ் சிலிண்டர்: ஏசி இயந்திரம் பழுது பார்த்தபோது விபரீதம்
இஸ்லாமாபாத்; பாகிஸ்தான் சுப்ரீம்கோர்ட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானின் சுப்ரீம்கோர்ட் உள்ளது. இன்று வழக்கம் போல் நீதிமன்றத்தில் அலுவல்கள் தொடங்கியது. கோர்ட் இயங்கும் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் உணவகம் செயல்பட்டு வருகிறது.இந் நிலையில் உணவகத்தில் ஏசி இயந்திரம் பழுதுபார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த கேஸ் சிலிண்டர் எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்தது. உடனடியாக கோர்ட் வளாகத்தில் இருந்த நீதிபதிகள், வக்கீல்கள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவத்தை அறிந்து இஸ்லாமாபாத் போலீஸ் ஐ.ஜி., சையத் அலி நாசிர் ரிஸ்வி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், கேஸ் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை தடயவியல் நிபுணர்களும் உறுதி செய்துள்ளனர். கடந்த பல நாட்களாக உணவகத்தில் கேஸ் கசிவு இருந்ததும் தெரிய வந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.