அமெரிக்க விசாவுக்கு 13 லட்சம் ரூபாய் டிபாசிட் கட்டாயம்
நியூயார்க்:அமெரிக்காவுக்கு செல்ல சுற்றுலா மற்றும் வர்த்தக விசாவுக்கு, 13 லட்சம் ரூபாய் 'டிபாசிட்' செலுத்துவதை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், குடியுரிமை தொடர்பாக பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். மேலும் விசா வழங்குவதிலும் கெடுபிடி காட்டப்படுகிறது. பல்வேறு விசாக்களில் வந்து, விசா காலம் முடிந்தும் தங்குவதை தடுக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன்படி, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்காக விசா கேட்போர், 13 லட்சம் ரூபாய் வரை, பிணைத் தொகையாக 'டிபாசிட்' செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது விரைவில் நடைமுறைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.