வாட்ஸ் அப் அட்மின் ஆக இருக்க கட்டணம்: எங்கு தெரியுமா?
ஹராரே: ஜிம்பாப்வே நாட்டில் வாட்ஸ்அப் செயலியில் குழு துவங்குவதற்கு முன்னர், 'அட்மின்' ஆக இருப்பவர் தபால் துறையில் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அந்த நிறுவனம் அடிக்கடி 'அப்டேட்'களை வழங்கி வருகிறது. இச்செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்களை தாங்களே பார்க்க முடியாத வகையில் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டு உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது. இதனால், குடும்பம், நண்பர்கள், அலுவல் ரீதியில், வணிகத்திற்கு என பல்வேறு வகையான பயன்பாட்டிற்கு குரூப்கள் உருவாக்கப்படுகின்றன. பல்வேறு நல்ல விஷயங்கள் இருந்தாலும் சமூக விரோதிகள், கலகம் விளைவிப்போர், இதனை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில், ஜிம்பாப்வே அரசானது நாட்டில் பொய்த்தகவல் பரவி, அமைதியின்மை ஏற்படுவதை தடுக்க வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.இதன்படி, வாட்ஸ் அப் குரூப்களில் அட்மின் ஆக இருப்பவர் தபால் துறையில் அதனை கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். அப்போது தங்களை பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும். குழுவில் உள்ளவர்களின் மொபைல் எண்ணை வைத்து இருக்க வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.இதன் மூலம் பொய்த் தகவல் எங்கு இருந்து பரவுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியும் என அந்நாட்டு அரசு விளக்கம் அளித்து உள்ளது. அதேநேரத்தில் இதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது எப்படி சாத்தியமாகும் என அங்கு ஒரு புதிய விவாதம் எழுந்துள்ளது.