| ADDED : நவ 10, 2025 05:02 AM
வாஷிங்டன்: அமெரிக்க அரசுக்கான நிதி முடக்கம் நேற்று 40வது நாளை எட்டியதால், செனட் சபையில் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சு நடந்தது. அமெரிக்காவில் அக்டோபர் 1 முதல் புதிய நிதி ஆண்டு துவங்கும். அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம், உணவு உதவி போன்ற செலவினங்களுக்கு பார்லிமென்டில் நிதி மசோதாவை நிறைவேற்ற வேண்டும். மானியங்கள் ஆனால், கடந்த அக்டோபர் 1ல் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் ஆதரவு, அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துக்கு கிடைக்காததால், நிதி மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் அரசின் பல்வேறு துறைகள் முடங்கியது. முந்தைய அதிபர் பராக் ஒபாமா கொண்டு வந்த மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கான அரசு மானியங்கள் டிசம்பருக்குள் முடிவடைகிறது. இதை நீட்டிக்க ஜனநாயக கட்சியினர் கோரிக்கை வைக்கின்றனர். அதை டிரம்ப் ஏற்க மறுக்கிறார். இதனால் மசோதாவை நிறைவேற்றுவதில் இழுபறி நீடிக்கிறது. நேற்றுடன் அரசு முடக்கம் ஏற்பட்டு 40 நாட்கள் ஆகியுள்ளது. அக்டோபர் முழுதும் நடந்த பேச்சுகள் அனைத்தும் தோல்வியடைந்தன. நடந்து முடிந்த மேயர் மற்றும் மாகாண தேர்தலில் குடியரசு கட்சி தோற்றதற்கு அரசு முடக்கமே காரணம் என டிரம்ப் கருதுகிறார். எனவே முடக்கத்தை விரைவில் நீக்க விரும்புகிறார். ஆதரவு தேவை மசோதாக்கள் நிறைவேற்ற முடியாமல் போவதற்கு செனட்டில் உள்ள 'பிலிபஸ்டர்' எனும் விதியே காரணம். இந்த விதிப்படி, செனட்டில் மசோதா தாக்கலின் போது ஒரு செனட் உறுப்பினர் முடிவில்லாமல் பேசிக்கொண்டே இருந்தால், மசோதா மீது வாக்கெடுப்புக்கு வர முடியாது. இதை முடிவுக்கு கொண்டு வர சூப்பர் மெஜாரிட்டி எனப்படும் 60 செனட் உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்களே உள்ளனர். எனவே 'பிலிபஸ்டர்' விதியை நீக்கும்படி டிரம்ப் கூறியுள்ளார். இந்த விதியை நீக்க எளிய மெஜாரிட்டி எனப்படும் 51 உறுப்பினர்களின் ஆதரவே போதும். அதன் பின் அனைத்து மசோதாக்களும் நிறைவேற்றப்படும். ஆனால், இவ்விதி நீக்கப்பட்டால் எதிர்க்கட்சிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் போய்விடும். வரும் நாட்களில் இது நடக்கலாம் என கூறப்படுகிறது.