தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் விமான சேவை பாதிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்நாடு முழுதும் 8,000க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டதால், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணியர் பாதிப்புக்கு உள்ளாகினர். அமெரிக்காவின் எப்.ஏ.ஏ., எனப்படும் விமானப் போக்குவரத்து துறை, தொலைத்தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களில் புறப்பட தயாராக இருந்த அனைத்து விமானங்களையும் உடனடியாக நிறுத்த நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டது. இது குறித்து அமெரிக்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சீன் டபி கூறியதாவது: பழமையான கட்டமைப்புகளில் ஏற்பட்ட தரவு சுமையே இந்த தொழில்நுட்ப கோளாறுக்கு காரணம். கடந்த, 1980களில் பயன்படுத்தப்பட்ட சிறிய தாமிர வயர் இணைப்புகளைத்தான் நாங்கள் இன்னும் பயன்படுத்துகிறோம். இது ஒரு பழைய அமைப்பு. கூடுதல் தரவுகளால் ஏற்பட்ட சுமையின் காரணமாக இவை அனைத்தும் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் முடங்கின. முழுதும் செயலிழக்கவில்லை என்றாலும், அதன் தரவுகளில் ஏற்பட்ட குளறுபடிகளால், அந்த அமைப்பை முழுதும் நிறுத்தி வைத்தோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த தொழில்நுட்பக் கோளாறால், நாடு முழுதும், 8,000க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. கடந்த, 2001 செப்டம்பரில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல்களின் போது, பல நாட்களுக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை. அதன்பின், 2023ல் விமானிகளுக்கான அறிவிப்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இது போன்றதொரு முடக்கம் நிகழ்ந்தது. அதற்கு பின் தற்போது நாடு தழுவிய முடக்கத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.