வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான ஊழல் குற்றச்சாட்டு; நவம்பர் 13ல் நீதிமன்றம் தீர்ப்பு
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான ஊழல் குற்றச்சாட்டில், நவம்பர் 13ம் தேதி அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு அளிக்கிறது. வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 72. கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர் போராட்டத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவுக்கு தப்பி வந்தார். தற்போது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ளது. வங்கதேசத்திற்கு 2026ம் ஆண்டு பிப்ரவரியில் பொதுத்தேர்தலை நடத்திட தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், அவாமி லீக் ஆட்சி காலத்தில் ஏராளமானோர் காணாமல் போன வழக்கை, நீதிபதி கோலாம் மோர்டுசா மொஜூம்தர் தலைமையிலான 3 உறுப்பினர்கள் கொண்ட சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் விசாரித்தது. இது தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.தற்போது, அவர் வங்கதேசத்தில் இல்லாத நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, புலனாய்வு இயக்குநர் அதிகாரிகள் உள்பட 29 பேருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது.அப்போது, ''மனித குலத்திறகு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தப்பி ஓடவில்லை. அவர் நாட்டை விட்டு கட்டாயமாக வெளியேறும் சூழல் ஏற்பட்டது'' என ஷேக் ஹசீனாவின் வழக்கறிஞர் முகமது அமீர் விளக்கம் அளித்து இருந்தார். ஷேக் ஹசீனா மீதான ஊழல் குற்றச்சாட்டில், அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நவம்பர் 13ம் தேதி அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு அளிக்கிறது.