உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கார்பன் சந்தையை உருவாக்கும் முக்கிய ஒப்பந்தம் நிறைவேற்றம்

கார்பன் சந்தையை உருவாக்கும் முக்கிய ஒப்பந்தம் நிறைவேற்றம்

பாகு: பருவநிலை மாறுபாடு மாநாட்டில், உலகளாவிய கார்பன் சந்தையை உருவாக்குவது தொடர்பான மிக முக்கியமான ஒப்பந்தம் நிறைவேறியுள்ளது. இது, சர்வதேச நிதி இலக்குகளை நிர்ணயிப்பதற்கு வழிவகுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பருவநிலை மாறுபாடு பிரச்னை தொடர்பாக நடவடிக்கைகள் எடுப்பதற்காக, பாரிஸ் ஒப்பந்தம் 2015ல் கையெழுத்தானது.

எரிபொருள்

இதில், உலக நாடுகள் இணைந்துள்ளன. இதன்படி, கரியமில வாயு உமிழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதைவடிவ எரிபொருள்களுக்கு மாற்றாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.இந்த ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு நாடும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், இலக்குகள் தொடர்பாக விவாதிக்க, சி.ஓ.பி., எனப்படும் பருவநிலை மாறுபாடு மாநாடு நடத்தப்படுகிறது.இதன்படி, 29வது மாநாடு ஆசிய நாடான அஜர்பைஜானில் நடந்து வருகிறது.இந்தாண்டு கூட்டத்தில், தங்களுடைய தேசிய நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பை நிறைவேற்றுவதற்கு, வளர்ந்து வரும் நாடுகளுக்கு தேவையான நிதி இலக்கை நிர்ணயிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.இந்நிலையில், பாரிஸ் ஒப்பந்தத்தின் 6வது பிரிவின் கீழ், உலகளாவிய கார்பன் சந்தையை உருவாக்குவது தொடர்பாக புதிய செயல் நடைமுறைகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் நிறைவேறி உள்ளது.இரண்டு நாடுகள் அல்லது இரண்டு நிறுவனங்களுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்போது, பாரிஸ் ஒப்பந்தத்தின் 6வது பிரிவின்படி, சில சலுகைகள் பெற முடியும். குறிப்பாக, காற்று மாசுவைக் குறைப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளின் பலன்கள், அதை சிறப்பாக செயல்படுத்தும் நாடு அல்லது நிறுவனத்துக்கு கிடைக்கும்.

கண்காணிப்பு

பாரிஸ் ஒப்பந்தத்தின், 6.2வது பிரிவின் கீழ், நிறுவனங்கள் அல்லது நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தத்தில் சில நிபந்தனைகள் விதிக்க முடியும். மேலும், 6.4வது பிரிவின்படி, ஐ.நா., நிர்வகிக்கும் ஒரு கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும்.இந்த உலகளாவிய கார்பன் சந்தையை அமைப்பதற்கான புதிய நடைமுறைகளை உருவாக்க, தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இது, பருவநிலை மாறுபாடு பிரச்னைகளில் உரிய நடவடிக்கை எடுக்க, வளர்ந்து வரும் நாடுகளுக்கு தேவையான நிதி இலக்குகளை நிர்ணயிக்க உதவும் என, நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பருவநிலை மாநாடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை