உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா - பாக்., போர் நிறுத்தம் எப்போது வேண்டுமானாலும் மீறப்படலாம்; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தகவல்

இந்தியா - பாக்., போர் நிறுத்தம் எப்போது வேண்டுமானாலும் மீறப்படலாம்; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தகவல்

நியூயார்க்: இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமையை, ஒவ்வொரு நாளும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீரின் ப ஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, நம் ராணுவம், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மத்திய அரசு சண்டையை நிறுத்தியது. ஆனால், தன் தலையீடு இரண்டு அணு ஆயுத அண்டை நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். பாகிஸ்தானுடனான எந்த பிரச்னையிலும், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில், அமெரிக்காவில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியா - - பாக்., சண்டையை அதிபர் டிரம்ப் தீர்த்து வைத்ததாக மீண்டும் கூறினார்.

அந்த பேட்டியில் மார்கோ ரூபியோ கூறி உள்ளதாவது:

நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று நினைக்கிறேன். அமைதியை முன்னுரிமையாகக் கொண்டு நிர்வாகம் செய்யும் ஒரு அதிபரை பெற்றதற்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் உட்பட பல போர்களை அவர் நிறுத்தியுள்ளார். ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். அதற்கு காரணம், தற்போதுள்ள போர் நிறுத்த ஒப்பந்தமானது வலுவில்லாமல் உள்ளது. அதனால், எந்த நேரத்திலும் அது மீறப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், போர் நிறுத்தத்தை பராமரிப்பது என்பது ஒரு சவாலான பணி. போர் நிறுத்தம் மிக விரைவாக முறிந்து போகக்கூடும். ஆசிய நாடுகளான தாய்லாந்து - கம்போடியோ இடையேயான போர் நிறுத்தம் நீடிக்காததை நாம் பார்த்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Shivakumar
ஆக 19, 2025 12:20

உங்க பேச்சை கேட்கவில்லை என்றால் நீங்க பாகிஸ்தானை தூண்டிவிட்டு போர் நிறுத்தத்தை மீற சொல்லுவீங்க. அவனும் இந்தியா மேல் போர்தொடுப்பன். ஆனால் அதனுடைய விளைவு பாகிஸ்தானால் தாங்கமுடியாது. பாதி பாக்கிஸ்தான் இந்தியாவோட இணைந்துவிடும். மீதி பாதி அழிந்துவிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை