ஈரான் துறைமுகத்துக்கான சலுகை நீட்டிப்பால் இந்தியா நிம்மதி
டெஹ்ரான்: அமெரிக்கா விதித்துள்ள தடைகளிலிருந்து, ஈரானின் சபஹர் துறை முகத்துக்கு அளிக்கப் பட்ட விதிவிலக்கு சலுகை அடுத்தாண்டு ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஈரானின் சபஹர் துறைமுகமான ஷாஹித் பெஹெஷ்தி முனையத்தை இயக்கவும், மேம்படுத்தவும், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான 'இந்தியா போர்ட்ஸ் குளோபல்' கடந்த 2024ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இத்துறைமுகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா முதலீடு செய்ய உள்ளது. இத்துறைமுகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை விலக்கு, நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், இதை அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வரை அமெரிக்கா நீட்டித்துள்ளது. இந்தியாவுடன் அமெரிக்கா சமீபத்தில் மேற்கொண்டு வரும் வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சின் போது, சபஹர் துறைமுகத்தின் பிராந்திய மு க்கியத்துவத்தை இந்தியா வலியுறுத்தியதை அடுத்து இந்த தடை விலக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக கூறப் படுகிறது. சபஹர் துறைமுகம் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இது ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான நுழைவு வாயிலாக செயல்படுகிறது. இது பாகிஸ்தான் வழியாக செல்லும் பாதைகளை சார்ந்திருப்பதை குறைக்கிறது. மேலும் இது இந்தியா, ஈரான், ரஷ்யா மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளை இணைக்கும் ஒரு பன்முக வர்த்தக பாதையாகும். ஆப்கானிஸ்தானுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உதவிகள் போன்ற மனிதாபிமான பொருட்களை அனுப்புவதற்கான பாதையாகவும் இது உள்ளது. ஆப்கன் பொருளாதார ரீதியாக சரிந்தால், அது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச் சுறுத்தலாக மாறும் என அமெரிக்கா நம்புகிறது. ஆகையால், பொதுவாக ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தடைகளை விதிக்கும் போதிலும், சபஹர் துறைமுகத் திட்டத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பதற்கு இது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.