இந்தியர் மீது மீண்டும் தாக்குதல் 8 வயது சிறுவர்கள் அட்டூழியம்
டப்ளின்: அயர்லாந்தில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்திய குடும்பம் ஒன்றின் மீது இரண்டு சிறுவர்கள் இனவெறி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஒரு பகுதியான அயர்லாந்தில், கடந்த சில வாரங்களாக இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்திய வம்சாவளி டாக்சி டிரைவர் ஒருவரும், 6 வயது சிறுமி ஒருவரும் சமீபத்தில் தாக்குதலுக்கு ஆளாகினர். நாடு முழுதும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, இந்தியர்கள் விழிப்புடன் இருக்குமாறு அயர்லாந்தில் உள்ள இந்திய துாதரகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த சூழலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பம் மீது, 8 வயது சிறுவர்கள் இருவர் நேற்று தாக்குதல் நடத்தினர். இது குறித்து, அக்குடும்பத்தைச் சேர்ந்த பெண், டப்ளின் போலீசில் புகார் அளித்துள்ளார். டப்ளின் பஸ் நிறுத்தத்தில், தன் மகள்களுடன், 60 வயதுடைய இந்தியர் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 8 வயதுடைய இரண்டு சிறுவர்கள், அந்தப் பெண்களின் தந்தையை கேலி, கிண்டல் செய்துள்ளனர்; திடீரென தாக்குதலிலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.