உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜப்பானில் அதிவேக புல்லட் ரயில் இயக்கிய இந்திய டிரைவர்; வரலாற்றில் புதிய சாதனை

ஜப்பானில் அதிவேக புல்லட் ரயில் இயக்கிய இந்திய டிரைவர்; வரலாற்றில் புதிய சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டோக்கியோ: ஜப்பான் வரலாற்றில் முதல் முறையாக, அதிவேக புல்லட் ரயிலை, இந்திய டிரைவர் இயக்கிய நிகழ்வு நடந்துள்ளது. மும்பை- ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்காக பயிற்சி பெறும் டிரைவர்கள், கடுமையான பயிற்சிக்கு பிறகு இவ்வாறு ஜப்பானில் ரயில் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நாட்டின் வளர்ச்சிக்கு தகுந்தபடி பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி வரும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மும்பை - ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே (508 கிலோமீட்டர்) அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தை, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (ஜைகா) நிதியுதவியுடன் இந்தியா செயல்படுத்துகிறது.திட்டத்துக்காக, தங்கள் நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் புல்லட் ரயில்களின் தொழில்நுட்பத்தை ஜப்பான் வழங்குகிறது. அதாவது, இரு நாடுகளும் இணைந்து இந்த திட்டத்தை அமல் செய்கின்றன. புகழ் பெற்ற ஜப்பான் ரயில் போக்குவரத்து ஜப்பானில் இயக்கப்படும் அதிவேக புல்லட் ரயில்கள், அந்நாட்டு மொழியில், 'சின்கன்சென்' என்று அழைக்கப்படுகின்றன.நேரம் தவறாமை, வேகம், சுகமான பயண அனுபவம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு புகழ் பெற்ற இந்த ரயில்கள், அதிகபட்சமாக மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் 1964 முதல் ஜப்பானில் பயன்பாட்டில் இருக்கின்றன.

பயண நேரம் குறையும்

மும்பை - ஆமதாபாத் இடையே செல்வதற்கான நேரம், தற்போது 6 மணி நேரத்துக்கும் அதிகம். அதிவேக புல்லட் ரயில் திட்டம் அமல் செய்யப்பட்டால், 2 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில், இந்த தொலைவை கடந்து விட முடியும்.புல்லட் ரயில் திட்டத்துக்கான தொழில்நுட்பத்தை வழங்கும் ஜப்பானிய நிறுவனங்கள், இந்திய பணியாளர்கள், அலுவலர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றன.அவற்றில் முக்கியமானது, புல்லட் ரயில் இயக்குவதற்கான டிரைவர் பயிற்சியாகும். ஜப்பானில் ஒருவர் புல்லட் ரயில் இயக்க உரிமம் பெற வேண்டுமெனில், 3 முதல் 5 ஆண்டு பயிற்சி பெற வேண்டியிருக்கும். தொழில்நுட்பத் திறன், மருத்துவத்தகுதி, உளவியல் திறன் என பல கட்ட தேர்வுகள் நடத்தி, இவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கடுமையான பயிற்சி

விமானம் இயக்கும் பைலட் உரிமம் பெறுவதற்கான தேர்வுகளை விட, இந்த ரயில் இயக்குவதற்கான உரிமம் பெறுவது மிகவும் கடினம். இத்தகைய கடுமையான பயிற்சி பெறுவதற்காக, இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் 7 பேர் இந்தாண்டு துவக்கத்தில் ஜப்பான் அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்கள், 8 மாத காலம் கடுமையான பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து 'சிமுலேட்டர்' உதவியுடன் பயிற்சி பெற்ற டிரைவர்கள், அதன் முடிவில் இப்போது நேரடியாக அதிவேக ரயில்களை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது பயிற்சியின் நிறைவுக்கட்டம். இவ்வாறு பயிற்சி முடித்த இந்திய டிரைவர் விஷால் குமார் ரே என்பவர், ஜப்பானில் அதிவேக புல்லட் ரயிலை இயக்கியுள்ளார்.

இந்தியரின் சாதனை

வெளிநாட்டை சேர்ந்த ஒருவர், ஜப்பானில் பயணிகள் ரயில் இயக்குவது இதுவே முதல் முறை என்பதால் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. இது தொடர்பான நிகழ்ச்சி, ஜப்பானில் பிரபலமான டிவி டோக்கியோ தொலைக்காட்சியில் அரை மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.நிகாட்டா நிலையத்தில் இருந்து டோக்கியோ வரையிலான 4 மணி நேர ரயில் பயணத்தை படம் பிடித்து எடிட் செய்து ஒளிபரப்பினர். ஏராளமான பேர் இந்த நிகழ்ச்சியை கண்டு பாராட்டி, இந்திய, ஜப்பானிய நட்புறவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கலந்துரையாடிய மோடி

* மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்காக நேஷனல் ஹைஸ்பீடு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (NHSRCL) தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சார்பில் தான் தற்போது பணிகள் அனைத்தும் நடந்து வருகின்றன.* ரயில் டிரைவர்கள் மட்டுமின்றி பொறியாளர்கள், திட்டத் தலைவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என ஆயிரம் பேர் இவ்வாறு ஜப்பானில் பயிற்சி பெறுகின்றனர்.* இந்தாண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் ஜப்பான் சென்றிருந்த பிரதமர் மோடி, புல்லட் ரயில் இயக்குவதற்காக பயிற்சி பெறும் டிரைவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.* இவ்வாறு பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்ற அலுவலர்கள், பணியாளர்கள் மட்டுமே, புல்லட் ரயில் திட்டத்தில் பணியாற்ற முடியும்.* ஜப்பானிய சிங்கன்சென் அதிவேக ரயில் வழித்தடங்களில், 'பாலஸ்ட்-லெஸ்' எனப்படும் அடிப்புறத்தில் ஜல்லி கற்கள் இல்லாத 'ஜே ஸ்லாப் டிராக் சிஸ்டம்' பயன்படுத்தப்படுகிறது. இதை இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை பயன்படுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Nagarajan S
டிச 26, 2025 20:24

Congratulations to the Indian Loco Driver operating Bullet Train at Japan


Raghavan
டிச 26, 2025 20:03

இதிலேயும் இடஒதுக்கீடு வந்தால் என்னசெய்யமுடியும்.


Sriniv
டிச 26, 2025 17:07

Congratulations Vishal Kumar.


V Venkatachalam, Chennai-87
டிச 26, 2025 15:45

கன்கிராட்ஸ் மிஸ்டர் விஷால் குமார் ரே. இந்தியாவில் இயக்கப்போகும் முதல் புல்லட் ரயிலை நீங்களே இயக்க வேண்டும் என்று விழைகிறேன். உங்கள் சாதனைக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.


சமீபத்திய செய்தி