இந்தோ - பசிபிக் ஒத்துழைப்பு விரிவடைய வலியுறுத்தல்
ரோம், 'இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு முயற்சிகள் பெரிய அளவில் விரிவடைய வேண்டும்' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். 'ஜி - 7' நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் பேசியது தொடர்பாக, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது:இந்தோ - பசிபிக் எனப்படும் இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு இடைப்பட்ட நாடுகள் இடையே, பல்வேறு விஷயங்களில் ஒத்துழைப்புகள் தேவை. தற்போதைய யுகம், ஒத்துழைப்பு, கூட்டு ஒத்துழைப்பு ஆகியவற்றால் மட்டுமே இயங்க முடியும்.பிரச்னைகளுக்கான தீர்வுகள், சுணக்கம் இல்லாத துாதரக உறவுகள், தேவையான இடங்களில் வளைந்து கொடுப்பது, விரிவான கலந்துரையாடலுக்கு தயாராக இருப்பது ஆகியவையே தற்போதைய தேவை. இந்த வகையில், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு முயற்சிகள் பெரிய அளவில் விரிவடைய வேண்டும்.இதில், ஜி - 7, குவாட் போன்ற அமைப்புகள் பெரிய அளவில் உதவுகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பல நாடுகளுக்கு இடையே கூட்டு ஒத்துழைப்பு, நம் பெரிய நோக்கங்கள் நிறைவேற உதவும்.இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இவ்வாறு உறவுகள் வளர, ஆறு முக்கிய பொறுப்புகள் நமக்கு உள்ளன. கடல் சார் வணிகம், செமி கண்டக்டர், வினியோகத் தொடர் ஆகியவற்றில் ஒத்துழைப்பு தேவை. அதுபோல வளங்களை பயன்படுத்திக் கொள்வது, கடன்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதில் ஒத்துழைப்பு தேவை.அரசு நிர்வாகம், சுகாதாரம், தொழில்நுட்பம், இயற்கை பேரிடர் போன்றவற்றில், நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு அவசியம்.சர்வதேச விதிகளை மதிப்பது, பரஸ்பரம் பயன் பெறுவது ஆகியவற்றுடன், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் சரியான முடிவுகளை எடுக்க வாய்ப்பளிப்பதும் மிக முக்கியம்.இவ்வாறு அவர் கூறினார்.