| ADDED : நவ 09, 2025 04:48 AM
ரோம்: இத்தாலிய பேஷன் நிறுவனமான 'பிராடா' சமீபத்தில், 'சேப்டி பின்' எனப்படும் ஊக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதற்கு, 69,000 ரூபாய் விலை நிர்ணயித்துள்ளது அதிர்ச்சி அடைய செய்துள்ளது.ஐரோப்பிய நாடான இத்தாலியில் உள்ள ஆடம்பர பேஷன் நிறுவனமன பிராடா அறிமுகம் செய்யும் பொருட்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு.ஏற்கனவே நம் நாட்டின் கோலாப்பூரி செருப்பை, மாடல்களுக்கு அணிவித்து, அதை தன் தயாரிப்பு என்று கூறியது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து மன்னிப்பு கேட்டது.இந்நிலையில், அந்த நிறுவனம், சமூக வலைதளத்தில் புதிதாக ஒரு பொருளை அறிமுகம் செய்துள்ளது. அது, வெள்ளியால் ஆன ஒரு சேப்டி பின் தான். அந்த சேப்டி பின்னின் ஒருபுறம் கம்பளி நுாலால் சுற்றப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை, 69,000 ரூபாய் ஆகும்.இது குறித்து, சமூக வலைதள பக்கங்களில், நகைச்சுவை, அதிர்ச்சி மற்றும் விமர்சனம் ஆகிய கலவையான விமர்சனங்களை பயனாளர்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக, 'எங்க பாட்டியே இதையெல்லாம் தயாரிப்பர்' என்பது பரவலாக பகிரப்பட்டது. இதன் வாயிலாக, இந்த பொருள் எளிதில் கிடைக்கக்கூடியது; குறைந்த செலவில் தயாரிக்கக்கூடியது என்பதை நெட்டிசன்கள் மறைமுகமாக விளக்கினர்.சாதாரணப் பொருட்களை, ஆடம்பர நிறுவனங்கள் கையில் எடுத்துக்கொண்டு, அவற்றை உயர்ரக பேஷன் பொருள் எனக் கூறி, மீண்டும் காட்சிப்படுத்துவது என்பது நுகர்வோரின் கலாசாரம், மதிப்பு மற்றும் பேஷன் உலகில் கலை ஆகியவை குறித்த விவாதங்களை துாண்டும் ஒரு சம்பவமாக இது மாறியுள்ளது.