இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இஸ்ரேலும் ஹமாஸும் போர் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, எகிப்தில் மும்முரமாக நடந்தது. இது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரேலும், ஹமாஸும் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதனால் அனைத்து பிணைக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள். அமைதியை உருவாக்க, முதல்கட்ட ஒப்பந்தத்தின் படி தனது பாதுகாப்பு படையினரை இஸ்ரேல் திரும்ப பெறும். அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள். அரபு, முஸ்லிம் நாடுகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கும் இது ஒரு சிறந்த நாள். இதற்காக, எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். அமைதியை ஏற்படுத்துபவர்கள் பாக்கியவான்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். கேள்வியும் பதிலும்!
வெள்ளை மாளிகையில் நிருபர்கள் கேள்விக்கு அதிபர் டிரம்ப் பதில் அளித்தார். அதன் விபரம் பின்வருமாறு:எனக்கு தெரியாது
அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கான வாய்ப்புகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: எனக்கு எதுவும் தெரியாது. ஏழு போர்களை நாங்கள் தீர்த்து வைத்தோம். 8வது போர் ஒன்றை தீர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். உக்ரைன்- ரஷ்யாவின் போரை நாங்கள் தீர்த்து வைப்போம் என்று நினைக்கிறேன். வரலாற்றில் யாரும் இவ்வளவு அதிகமாகத் தீர்த்து வைத்ததாக நான் நினைக்கவில்லை. ஆனால், அதை (அமைதிக்கான நோபல் பரிசு) எனக்குக் கொடுக்காமல் இருக்க ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்.மேலும் அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஹமாஸ் மற்றும் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நன்றாக நடக்கின்றன. இதற்கு முன்பு அப்படி எதுவும் நடந்ததில்லை. மத்திய கிழக்கில் அமைதியை கொண்டு வர ஒரு ஒப்பந்தத்திற்கு மிக அருகில் இருக்கிறோம். மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்வது குறித்து இன்னும் சரியாக முடிவு செய்யவில்லை. நான் பெரும்பாலும் எகிப்துக்குச் செல்வேன். அங்கு முக்கிய முடிவு எடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.
பிணைக்கைதிகளை மீட்போம்
காசா போரை முடிவுக்கு கொண்டு முதல்கட்ட திட்டத்தில் கையெழுத்தாகி உள்ளது என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள பதிவில், ''கடவுளின் உதவியுடன் நாங்கள் பிணைக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு கொண்டு வருவோம்'' என குறிப்பிட்டுள்ளார்.