உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் - ஈரான் போர் நீடித்தால் யாருக்கு பாதிப்பு?

இஸ்ரேல் - ஈரான் போர் நீடித்தால் யாருக்கு பாதிப்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேற்காசியாவில் இஸ்ரேல்- ஈரான் போர் துவங்கினால் என்ற நிலையைத் தாண்டி, இப்போது அந்த போர் நீடித்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று சர்வதேச வல்லுநர்கள் அலசிக் கொண்டிருக்கின்றனர். போர் தொடர்ந்து நடந்தால், அதன் தாக்கத்தை நம் நாட்டிலும், வீட்டிலும் உணர முடியும். இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே உள்ள பிரச்னை, மிக நீண்ட வரலாறு கொண்டது. பயங்கரவாத அமைப்புகளை துாண்டிவிட்டு, இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுத்து வந்தது ஈரான்.அதிலும் குறிப்பாக, ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட முயற்சிப்பது, தன்னை குறிவைத்து தான் என்ற எண்ணம் இஸ்ரேலிடம் பரவலாக இருக்கிறது. அணு ஆயுதத்தை தயாரிப்பதன் வாயிலாக, முஸ்லிம் நாடுகளின் தலைமை பொறுப்பு தன்னை தேடி வரும் என்று ஈரான் நம்புகிறது.

தக்க பதிலடி

பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள், 'சன்னி' வகுப்பைச் சேர்ந்தவை. ஈரானில், 'ஷியா' வகுப்பினரே பெரும்பான்மையினராக உள்ளனர். இதனாலும், சன்னி இஸ்லாமிய நாடுகளின் தலைமை பொறுப்பை அடைவதற்கு, ஈரான் தொடர்ந்து அவசரம் காட்டி வந்துள்ளது.இது இப்படி என்றால், 2023 ஹமாஸ் தாக்குதலுக்கு முன்னர், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உள்நாட்டில் செல்வாக்கை இழந்து பதவியில் இருந்து வெளியேற்றப்பட இருந்தார்.அவரை எதிர்த்து நடைபெற்ற நாடு தழுவிய போராட்டங்களுக்கு முத்தாய்ப்பாக ஹமாஸ் தாக்குதல் அமையும் என்றும் சிலர் கருதினர். ஆனால், நெதன்யாகு அந்த தாக்குதலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, ஹமாஸ் மற்றும் காசா பகுதியில் வாழும் பாலஸ்தீன மக்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வந்தார்.இதன் வாயிலாக, உள்நாட்டில் அவர் இழந்த ஆதரவை திரும்ப பெற்றாரோ இல்லையோ, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழவில்லை. இவ்வாறு இரண்டு நாட்டின் தலைமைகளுக்கான தனித்தனி இலக்குகள், இந்தப் போர் துவங்கியதற்கும், தொடர்ந்து நடப்பதற்கும் காரணமாகும். எப்போது மேற்காசியாவில் போர் நடந்தாலும், உலகில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் போக்குவரத்து தடைபடும். இதனால், சர்வதேச சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை எகிறும்.

வேறு கதை

தற்போது, ஐரோப்பாவில் தொடரும் உக்ரைன் - ரஷ்யா போரால் நிலைகுலைய இருந்த கச்சா எண்ணெய் பொருளாதாரம், ரஷ்யாவின் புத்தி சாதுர்யத்தால் முறியடிக்கப்பட்டது. இதனால், நம் நாடு பெருமளவில் பயன் பெற்றது.ஆனால், ஈரான்- - இஸ்ரேல் போர் வேறு கதை. அந்த போர் நம் நாட்டின் அருகாமையிலேயே நடைபெறுகிறது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் தமிழர்கள் உட்பட நம் நாட்டவர்கள் பெருமளவில் குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.நம் நாடு, வர்த்தக ரீதியாக ஈரானுடன் நட்பு பேணுகிறது. அதிலும் குறிப்பாக, அந்த நாட்டில் சபஹார் என்ற இடத்தில், நம் நாடு ஒரு துறைமுகத்தை அமைத்து, மத்திய ஆசிய நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றோடு நம் வர்த்தகத்தை மேம்படுத்தி வருகிறது.அதே சமயம், 1990களில் காங்கிரசின் நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் ரகசியமாக துவங்கப்பட்ட இஸ்ரேலுடனான நம் உறவு, இப்போது ராணுவ ஒத்துழைப்பாக தொடருகிறது.போதாதற்கு, நம் நாட்டைச் சேர்ந்த அதானி குழுமத்திற்கு, இஸ்ரேலில் ஹெய்பா துறைமுகம் சொந்தம். அந்த துறைமுகத்தின் வாயிலாகத் தான், அந்த நாட்டிற்கான 30 சதவீத சரக்கு இறக்குமதி நடைபெற்று வருகிறது.

நடுநிலைமை

இந்த பின்னணியில், ஐ.நா., பொது சபையில் இஸ்ரேலுக்கு எதிரான கண்டன தீர்மானத்தில் ஓட்டளிக்காமல் நம் நாடு, உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் பேசுபொருளாகி உள்ளது.உள்நாட்டு அரசியலை போலவே, நாம் சர்வதேச அரசியலை புறந்தள்ளிவிட முடியாது.இந்த போர் இன்னமும் தொடருமானால், நிச்சயமாக கச்சா எண்ணெய் விலை கூடும்; தட்டுப்பாடு கூட தோன்றலாம். அது, நம் நாடு மற்றும் வீட்டு பொருளாதாரத்தையும் அசைத்து பார்க்கலாம்.இதுவே பிற நாடுகளுக்கும் பொருந்தும். என்றாலும், தலையிடியால் பாதிக்கப்பட்டவனே அதன் வலியை உணருவான் என்ற நிலைமை நமக்கும் தோன்றும். இடைப்பட்ட காலத்தில், ஈரானை ஒட்டி அமைந்துள்ள ஹீர்முஸ் ஜலசந்தியின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற கவலை, குறிப்பாக வளைகுடா நாடுகளை பீதியடைய செய்திருக்கிறது.அந்த குறுகிய 3 கிலோ மீட்டர் அகலமே உள்ள நீரிணையின் வாயிலாக, உலகெங்கும் செல்லும் எண்ணெய் கப்பல்கள் பாதிக்கப்படலாம். இதை காரணம் காட்டி, அந்த கப்பல்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனங்கள் அவற்றிற்கான பிரீமியத்தை கன்னாபின்னாவென்று உயர்த்தினாலே போதும். அனைத்து பொருட்களின் விலைவாசிகளும் எகிறும்.அது போன்று, இந்த ஜலசந்தியை மேலை நாடுகள் பயன்படுத்தாமல் தடுக்க, ஈரான் அதை அடைத்து விடலாம். அந்த நீரிணையில், சில பழைய கப்பல்களை எரிய விட்டாலே போதும்.அவை அந்த பகுதியில் எண்ணெய் மற்றும் கன்டெய்னர் கப்பல்கள் பல மாதங்களுக்கு பயணிக்க முடியாமல் செய்துவிடும்.இந்த இரண்டில் எது நடந்தாலும், அது, நம் நாட்டையும் மற்றும் வீட்டு பொருளாதாரத்தையும் பாதிக்கும். எனவே தான், மத்திய அரசு நடுநிலை வகிப்பதுடன், பேச்சு வாயிலாகவே பிரச்னைகளுக்கான தீர்வை காண முயல வேண்டும் என்று ஐ.நா., பொது சபையில் வேண்டு கோள் விடுத்துள்ளது.என்.சத்தியமூர்த்திசர்வதேச அரசியல் ஆய்வாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Abdul Rahim
ஜூன் 17, 2025 17:30

ஈரானில் தொடங்கியிருக்கும் துறைமுகம் இந்திய அரசிற்கு சொந்தமானது , இஸ்ரேலில் இருப்பது அதானி பெருமகனாருடையது நம்ம தலீவரு யாருக்கு சப்போர்ட் பண்ணுவாருன்னு குழைந்தைக்கு கூட தெரியும் ....


Ramesh Sargam
ஜூன் 17, 2025 13:31

இந்தியாவின் நிலைமை இருதலைக்கொள்ளி எறும்பு போல உள்ளது. இஸ்ரேல் நாட்டையும் விடமுடியவில்லை. ஈரான் நாட்டையும் பகைத்துக்கொள்ள முடியவில்லை.


தஞ்சை மன்னர்
ஜூன் 17, 2025 11:37

"" நம் நாடு ஒரு துறைமுகத்தை அமைத்து, "" திரும்ப திரும்ப பொய் சொல்லவேண்டாம் இந்த துறைமுகம் கொண்டு இந்திய அரசுக்கு நேரடியாக வருமானம் என்ன அதானிக்கு வருமானம் என்ன


ஆரூர் ரங்
ஜூன் 17, 2025 11:50

ராஜதந்திர நடவடிக்கையாக துறைமுக ஒப்பந்தம். இதில் நேரடி லாபநஷ்ட கணக்கு பார்க்கக் கூடாது. இதே துறைமுகத்தை பாகி துவங்கி இருந்தால் உங்கள் கருத்து வேறாக இருக்கும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 17, 2025 13:15

அதானி ன்னாலே உதறுதே .....


Kumar Kumzi
ஜூன் 17, 2025 14:02

இதோ வந்துட்டான்யா


rama adhavan
ஜூன் 17, 2025 10:40

நல்ல கருத்து. ஆனால் நமது மக்கள் அதிகம் பேர் இதை படித்து உள்வாங்க மாட்டார்கள்.


Suppan
ஜூன் 17, 2025 16:07

தர்மராசு அய்யா அதானிக்கு பதிலாக நீங்கள் அந்தத் துறைமுகத்தை எடுத்து நடத்தலாமே? அரசு உங்களுக்கு ஆதரவளிக்கும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை