உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் தலைவர் பலி

இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் தலைவர் பலி

ஜெருசலேம், இஸ்ரேல் ராணுவம் காசா மீது நேற்று நடத்திய தாக்குதலில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வர், 62, கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த ஆண்டு அக்., 7ல் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இவர்கள் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில், 1,200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் பயங்கரவாதிகளை பூண்டோடு ஒழிக்கும் வரை ஓயமாட்டேன் என்று சூளுரைத்தார். ஓராண்டுக்கும் மேலாக நடந்து வரும் போரில், காசாவில் 40,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் தற்போது ஹமாஸ் தலைவராக உள்ள யாஹ்யா சின்வராக இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது.அதை உறுதி செய்வதற்காக அவரது மாதிரிகளை டி.என்.ஏ., பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்நிலையில் கொல்லப்பட்டது யாஹ்யா சின்வர் தான் என இஸ்ரேல் அரசு உறுதி செய்துள்ளது.யாஹ்யா சின்வர் கடந்த ஆண்டு அக்., 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர்.

அதிநவீன 'பி2 பாமர்'

ஏமனை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாதிகள், ஹமாசுக்கு ஆதரவாக செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை குறி வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில், அமெரிக்க விமானப்படை நேற்று தன் அதி நவீன பி2 பாமர் என்ற விமானத்தை பயன்படுத்தி, ஏமன் தலைநகர் சனாவில் ஹவுதி பயங்கரவாதிகளின் ஆயுத கிடங்குகளை அழித்தது. ஹவுதி பயங்கரவாதிகளுக்கு எதிராக முதன் முறையாக பி2 பாமர் விமானத்தை அமெரிக்கா பயன்படுத்தியிருப்பது, ஈரானுக்கு விடுக்கும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Iniyan
அக் 19, 2024 05:02

பயங்கரவாதிகள் நசுக்க படவேண்டும்.


நிக்கோல்தாம்சன்
அக் 19, 2024 04:37

அமேரிக்கா எனும் தீவிரவாத நாடு எப்போது சிதறுண்டு போகும் என்று ஆவலாக காத்துள்ளேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை